கள்ளக்குறிச்சி: ஒரே நேரத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகள் - பிபிசி கள ஆய்வு

கள்ளக்குறிச்சி
படக்குறிப்பு, துக்க வீட்டிற்கு வருபவர்கள் எத்தனை வீடுகளுக்கு செல்வதென்று தெரியாமல் கண்ணீரில் திகைத்து போய் நின்றதை பார்க்க முடிந்தது.
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பின்புறம் உள்ள கருணாபுரம் பகுதிக்குள் நுழைந்தபோது பரபரப்பான நகரின் எந்த ஒரு சத்தமும் கேட்காதவாறு மரண ஓலம் ஆதிக்கம் செலுத்தியது.

“எங்கண்ணன் துடி துடித்து இறந்ததை நான் என் கண் முன்னே பார்த்தேன் சார்” என்று அழுதுகொண்டே கூறினார் மணி.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து முதன் முதலில் இறந்த சுரேஷின் சகோதரர் இவர்.

“எனது சகோதரர் சுரேஷ் தான் இந்த சாராய குடிக்கு முதல் பலி. அவர் துடி துடித்து இறந்ததை நான் என் கண் முன்னே பார்த்தேன். முதலில் கை கால் வலிக்கிறது என்று கூறியவர் மரத்துப் போனதாக கூறினார் .வயிறு வலிக்கிறது என்று துடித்தவரை தூக்கிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினாலும் எனது அண்ணன் சுரேஷ் பிழைக்க முடியவில்லை. வயிறு திடீரென உப்பியதை என் கண் முன்னே பார்த்தேன்.”

“கள்ளச்சாராயம் குடித்தால் என்ன நடக்கும் என்பதை பார்த்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார் மணி.

இப்படி சகோதரரை இழந்தவர்கள், ஒரே வீட்டில் இருவரை இழந்தவர்கள், குடும்பத்தின் ஆதாரமாய் இருந்த நபரை இழந்தவர்கள் என கள்ளக்குறிச்சி ஜோகியர் தெரு மற்றும் கருணாபுரம் தெருவே இறந்த உடல்களால் நிரம்பி வழிகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதன்கிழமை உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர்.

இந்நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என நான்கு கிராமங்களைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி
படக்குறிப்பு, “கள்ளச்சாராயம் குடித்தால் என்ன நடக்கும் என்பதை பார்த்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார் மணி.

வேதனையில் குடும்பங்கள்

கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் இறந்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. களத்தில் அம்மக்களின் துயர் குறித்து அறிந்துக் கொள்வதற்காக பிபிசி தமிழ் களத்திற்கு சென்றது.

தெருவெங்கும் அழுகுரல்கள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்க, அருகருகே போடப்பட்டிருந்த பந்தல்களின் அடியில் வரிசையாக பிரேதபெட்டிகளில் இறந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. துக்க வீட்டிற்கு வருபவர்கள் எத்தனை வீடுகளுக்கு செல்வதென்று தெரியாமல் கண்ணீரில் திகைத்து போய் நின்றதை பார்க்க முடிந்தது.

ஒரே வீட்டில் கணவன், மனைவி இறப்பு

இரண்டு பள்ளி மாணவர்கள் அழுது கொண்டே இருந்ததை பார்க்க முடிந்தது. அந்த ஒட்டுமொத்த தெருவும் கண்ணீரில் மூழ்கியிருந்தாலும், இந்த சிறுவர்களின் சத்தம் காண்போரின் மனதை குத்தி கிழித்தது.

அதில் ஒருவர பத்தாம் வகுப்பு படிப்பவர். தனது தாய் வடிவுக்கரசி மற்றும் தந்தை மாற்றுத்திறனாளியான சுரேஷ் ஆகிய இருவருமே கள்ளச்சாராயம் குடித்ததில் இறந்துவிட்டனர் என்று அழுது கொண்டே கூறினார்.

“எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவரும் 11 ஆம் வகுப்பு தான் படிக்கிறார். அம்மா அப்பா இருவருமே இல்லாமல் இனி நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.”

அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள கந்தன் என்பவரும் இதில் இறந்து விட்டார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவரது வயது முதிர்ந்த அம்மா, “ கந்தனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இனி நான் என்ன செய்ய போகிறேன். அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று தான் கந்தன் குடும்பத்தை காப்பாற்றினான். நான் இந்த வயதில் எப்படி வேலைக்கு செல்வேன்” என்று வேதனையுடன் கூறினார்.

இதேபோல் தான், லட்சுமி, மணிகண்டன், சுரேஷ் என இறந்து போனவர்கள் அனைவரது வீட்டின் முன்பும் பந்தல் போடப்பட்டு ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கருணாபுரம் பகுதியே அழுகுரலால் நிறைந்திருந்தது.

சில வீடுகளில் இறந்த உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸ் கிடைக்காததால் கட்டிலிலேயே சடலத்தை போட்டு வைத்து சடங்கு செய்ய தொடங்கியிருந்தனர்.

கள்ளக்குறிச்சி
படக்குறிப்பு, கருணாபுரம் பகுதியிலேயே வசித்து வரும் தாமோதரன் மற்றும் கோவிந்தராஜன் என்ற இருவர்தான் இந்த பகுதியில் வாடிக்கையாக பல ஆண்டுகளாகவே கள்ளச்சாராயம் விற்று வருவது தெரிய வந்துள்ளது.

24 மணிநேரமும் கிடைக்கும் சாராயம்

அங்கு கூடியிருந்த பெண்கள் பலரிடமும் பேசுகையில், ஏதோ வீட்டு வீடு அரிசி கொடுப்பது போல, 24 மணிநேரமும் இந்த கள்ளச்சாராயம் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

அதுவும் ஆட்டோ, இருசக்கர வாகனம் என பலவற்றிலும் வந்து வீட்டிலேயே கொடுத்துவிட்டு போகும் வழக்கமும் உண்டு. இதில் ஆண், பெண் என இருவருமே இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி பருகுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றாலும், பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் எங்களையே திட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் கருணாபுரம் மக்கள்.

பிபிசி தமிழ் கள ஆய்வின்போது, கருணாபுரம் பகுதியிலேயே வசித்து வரும் இருவர்தான் இந்த பகுதியில் வாடிக்கையாக பல ஆண்டுகளாகவே கள்ளச்சாராயம் விற்று வருவது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள்

பெரும்பாலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பழங்குடியினர் மற்றும் பட்டியலின வகுப்புகளை சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் சந்தையில் மூட்டை தூக்குதல் உள்ளிட்ட கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.

இந்நிலையில் அதிகாலை வேலைக்கு செல்லும்போதும், வேலை முடித்து வரும்போதும் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது என்பதனால், மேற்சொன்ன இருவரிடமும் தான் சாராயம் வாங்கி அருந்துவார்களாம்.

இதுமட்டுமின்றி, அரசு மதுபானக்கடை இருக்கும்போது ஏன் இவர்கள் இதை வாங்கி அருந்துகிறார்கள் என்ற கேள்விக்கும் அப்பகுதி மக்கள் பதிலளிக்கின்றனர்.

“அரசு மதுபானக்கடையில் மது அருந்தினால் 150 ருபாய் தேவைப்படும். ஆனால், இவர்களிடம் ஒரு பாக்கெட் 50 ருபாய் மட்டுமே. எனவே தினசரி கிடைக்கும் 300 முதல் 500 ரூபாய் கூலியை வைத்துக் கொண்டு இதை மட்டுமே வாங்கி அருந்த முடியும்” என்கின்றனர் அந்த மக்கள்.

கள்ளக்குறிச்சி
படக்குறிப்பு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களுக்கான செலவு முதல், இறந்தவர்களை அடக்கம் செய்வது வரை அரசே செய்து வருகிறது. மூத்த அமைச்சர்களும் தற்போது வரை கள்ளக்குறிச்சியில் தன் முகாமிட்டுள்ளனர்.

அரசு தரப்பில், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் உள்ளனர்.

இதுதவிர எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

எதிக்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் "கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றம் உள்ளது. அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன." எனக் குற்றம்சாட்டினார்.

இவரைத் தொடர்ந்து தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா, “கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது” என்று பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் விஷ சாராய உயிரிழப்பு நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. விஷ சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. விஷ சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

பட மூலாதாரம், M K STALIN

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்நாதன் தலைமையில் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சியில் கலப்பட சாராயம் குடித்து பலியாகிய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தை சீரழிக்கும் இதுபோன்ற குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத் இடமாற்றம் செய்யப்பட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்பட 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)