டி20 உலகக்கோப்பை: சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய வீரர்

USA vs SA

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் கத்துக்குட்டி அமெரிக்க அணிக்கு எதிராக போராடித்தான் தென் ஆப்ரிக்க அணியால் வெல்ல முடிந்துள்ளது. ரபாடா, நோர்க்கியா மட்டும் கடைசி இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்திருந்தால், தென் ஆப்ரிக்காவின் தோற்றுப் போயிருக்கும்.

சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய ஆன்ட்ரிஸ் கோஸின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆட்டத்தில் என்ன நடந்தது?

ஃபார்முக்கு வந்த டீ காக்

நார்த் சவுண்ட் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குருப்-பி பிரிவில் தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அமெரிக்காவில் இருந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சொதப்பலாக பேட் செய்த தென் ஆப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் ஃபார்முக்கு திரும்பினார்.

USA vs SA

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொடக்கத்தில் திணறிய டீ காக், பவர்ப்ளேயில் 4 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ஜஸ்தீப் சிங் ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்த அவர் அதனைத் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ஃபார்முக்கு திரும்பினார். ஜஸ்தீப் சிங் தனது முதல் ஓவரிலேயே 28 ரன்களை வாரி வழங்கினார்.

பவர்ப்ளே முடிவில் டீகாக்கின் அதிரடியால் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக ஆடத் தொடங்கிய டீ காக், கோரி ஆன்டர்சன் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அணியின் ஸ்கோர் உயர்வுக்கு துணை செய்த டீ காக் 74 ரன்கள் (5சிக்ஸர்,7பவுண்டரி) சேர்த்து, டி20 உலகக் கோப்பையில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

USA vs SA

பட மூலாதாரம், Getty Images

கிளாசன், ஸ்டெப்ஸ் கூட்டணி

தென் ஆப்ரிக்காவின் ரன் குவிப்பில் கேப்டன் மார்க்ரம்(46), கிளாசன்(36நாட்அவுட்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(20நாட்அவுட்) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர்.

அதிலும் கிளாசன், ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது பெரிய ஸ்கோர் கிடைக்க உதவியாக இருந்தது.

USA vs SA

பட மூலாதாரம், Getty Images

நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் அபாரப் பந்துவீச்சு

அமெரிக்கா அணியும் பந்துவீச்சு, பேட்டிங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு சவலாக விளங்கினர். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், அடுத்த 7 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே அமெரிக்க அணியினர் சேர்க்கவிட்டனர். குறிப்பாக நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் இருவரும் சேர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

நெட்ராவல்கர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் 4 ஓவர்கள் வீசி 24ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்து தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவாக அமைந்தனர். மற்ற 5 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 10 சிக்ஸர்கள், 9பவுண்டரி உள்பட 148 ரன்களை வாரி வழங்கினர்.

USA vs SA

பட மூலாதாரம், Getty Images

சொந்த நாட்டை மிரட்டிய கோஸ்

தென் ஆப்பிரிக்காவில் டீன் எல்கர் பிறந்த அதே நகரில்தான் ஆன்ட்ரிஸ் கோஸ் பிறந்தார். கொரோனா காலத்தில் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட பல சிறிய லீக் ஆட்டங்களில் கோஸ், பலவீரர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் கோஸ், சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.

கோஸின் பேட்டிங் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. கோஸ் தான் சந்தித்த 6வது பந்திலேயே பவுண்டரிவிளாசினார். யான்சென் ஓவரில் சிக்ஸரும், நோர்க்கியா ஓவரில் 18 ரன்களும் கோஸ் நொறுக்கினார். அதிரடியாக ஆடிய கோஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்கா வெற்றி்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஹர்மீத் ஒரு சிக்ஸர் என 22 ரன்களை சேர்த்து தென் ஆப்ரிக்க அணிக்கு கிலி ஏற்படுத்தினார்.

கோஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து(5சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை போராடியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஹர்மீத் சிங்குடன் சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோஸ் ஆட்டத்தைப் பார்த்த போது, ஆட்டம் தென் ஆப்ரிக்காவின் கையைவிட்டு சென்றுவிட்டது என்று ரசிகர்கள் எண்ணினர்.

அமெரிக்க அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஒருவர் கூட சிறப்பான பங்களிப்பை அளிக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். கேப்டன் ஜோன்ஸ்(0), அனுபவ வீரர் கோரி ஆன்டர்சன்(12), நிதிஷ் குமார்(8), ஜகாங்கிர்(3) ஆகிய 4 பேட்டர்களும் சொதப்பிவிட்டனர்.

USA vs SA

பட மூலாதாரம், Getty Images

திருப்புமுனை ரபாடா

தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் ரபாடா, கேசவ் மகராஜ் பந்துவீச்சுதான் நேற்றைய ஆட்டத்தின்” டாப் கிளாஸ்”. இருவரும் வீசிய 8 ஓவர்கள்தான் அமெரிக்காவின் பேட்டிங்கை புரட்டிப்போட்டு, ரன்ரேட்டை இறுகப்பிடித்தது.

ரபாடா 4 ஓவர்கள் வீசி18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மகராஜ் 4ஓவர்கள் வீசி24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து 21 டாட் பந்துகளை வீசினர். ஏறக்குறைய 3.3 ஓவர்களை டாட் பந்துகளாக வீசிய நிலையில் 5 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிலும் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் அமெரிக்கா வெல்ல 50ர ன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரை வெளுத்து வாங்கிய கோஸ, ஹர்மீத் சிங் சிக்ஸர்களா விளாசினர். ஹர்மீத் ஒரு சிக்ஸர், கோஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர்.

கடைசி 2 ஓவர்களில் அமெரிக்கா வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 19-வது ஓவரை மிகத் துல்லியமாக, கட்டுக்கோப்பாக வீசி அமெரிக்காவிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். அது மட்டுமல்லாமல் ரபாடா 19-வது ஓவரில் ஹர்மீத் சிங்(38) விக்கெட்டையும் வீழ்த்தி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடி ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் அமெரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. நோர்க்கியாவும் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றியை உறுதி செய்தார்.

USA vs SA

பட மூலாதாரம், Getty Images

"பந்துவீச்சில் கோட்டை விட்டோம்"

அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறுகையில் “ வெற்றிக்கு அருகே வந்தபின் தோற்றது வேதனையாக இருக்கிறது. பந்துவீச்சில் நாங்கள் கோட்டைவிட்டுவிட்டோம், இன்னும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இருக்க வேண்டும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கிவிட்டால், உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும். அதற்கு எங்களிடம் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அதிகமான ஒழுக்கம் அவசியம்” எனத் தெரிவித்தார்

சூப்பர்-8 சுற்றில் முதல் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி 2 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை 0.90 ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.90 ஆகக் குறைந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)