அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் ஆப்கானிஸ்தான் சந்திக்கப் போகும் சவால்கள்

ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக்கோப்பையில் இன்று (26ஆம் தேதி) இரவு நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து மோதுகிறது முதல்முறையாக அரையிறுதி வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

20 ஆண்டுகளில் சாதனை

கடந்த 2004ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பைக்கு முதல்முறையாக 15 அணிகளுடன் ஆப்கானிஸ்தானும் தகுதி பெற்றது. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின் சீனியர் பிரிவில் ஐசிசி நடத்தும் பாரம்பரிய டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்று, நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை ஆப்கானிஸ்தான் அணி எட்டியுள்ளது.

இருபது அணிகள் மோதிய இந்தத் தொடரில் 16 அணிகளைக் கடந்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாட உள்ளது. பல அணிகள் 50 ஆண்டுகளில் சாதித்த செயலை, ஆப்கானிஸ்தான் அணி 20 ஆண்டுகளில் சாதித்துள்ளது.

வரலாற்றுப் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணி

வரலாற்றுப் பயணம்

இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பயணம் அற்புதமானது. கடினமான குரூப்பில் இடம் பெற்று, நியூசிலாந்தை தோற்கடித்து, அந்த அணி லீக் சுற்றோடு வெளியேற ஆப்கன் அணி காரணமாக இருந்தது.

சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்து அவர்களின் கோப்பைக் கனவை தவிடுபொடியாக்கியது ஆப்கானிஸ்தான். வங்கதேசத்தையும் வீழ்த்தி, முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் திறமையும், திறனும், தனித்தன்மையும், வளைகுடா எரிபொருட்கள் போலப் பொதிந்து கிடக்கிறது. அவர்களின் திறமையைத் தொடர்ந்து ஒவ்வொரு பயிற்சியாளரும், ஒவ்வொரு தொடரிலும் மெருகேற்றும்போது, ஜாம்பவான் அணிகளுக்கே சவால் விடும் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். உலகளவில் பிரபலமான டி20 லீக் தொடர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முக்கியக் காரணம்.

திறமையான ஆப்கன் வீரர்கள்

ரஷித்கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித்கான்

ஆப்கானிஸ்தான் அணியில் உலகளவில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரஷித் கான், டி20 கிரிக்கெட்டில் தவிர்க்கமுடியாத வீரர்.

'இடதுகை ரஷித் கான்' என்று அழைக்கப்படும் நூர் அகமது, பவர்ப்ளேவில் எதிரணி பந்துவீச்சாளர்களை மிரட்டக்கூடிய குர்பாஸ், அடுத்த டிரென்ட் போல்ட்டாக உருவெடுத்து வரும் பசல்லா ஃபருக்கி, டுவைன் பிராவேவின் ஆலோசனையில் மெருகேறி வரும் நவீன் உல் ஹக் என இவர்கள் அனைவரும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளுக்கும் சவால்களாக இருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ப்ளேயிங் லெவனில் உள்ள இந்த 8 வீரர்களுக்கும், வங்கதேச அணியை கடந்த திங்கள்கிழமை வீழ்த்தியதில் முக்கியப் பங்கு இருக்கிறது.

'தந்தையும் மகனும்'

முகமது நபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆல்ரவுண்டர் முகமது நபி

இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் முகமது நபி. 2004ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணி முதல்முதலாக சர்வதேச கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் இருந்து அணியில் நீடித்து வருகிறார்.

இன்று முகமது நபியின் மகன் ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி வருகிறார். 39 வயதாகும் முகமது நபி 20 ஆண்டுகளுக்குப் பின் தனது தேசத்தின் அணி முதன்முதலாக அரையிறுதியில் விளையாடும்போது அவரும் அணியில் இடம் பெற்றுள்ள உன்னதமான அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

முகமது நபிக்கு மற்றொரு அனுபவமும் இருக்கிறது. இதுவரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்று 45 அணிகளை வீழ்த்தியுள்ளார். இதில் தென் ஆப்ரிக்காவும் அடக்கம். இது தவிர முஜிபுர் ரஹ்மானும் சுழற்பந்துவீச்சில் மிரட்டவுள்ளார்.

வலிமையான சுழற்பந்துவீச்சு

முஜீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சாளர் முஜீப்பை பாராட்டும் கேப்டன் ரஷீத்கான்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சில் இருக்கும் வலிமை அந்த அணியின் பேட்டிங்கில் பெரிதாக இல்லை. அதிலும் நடுவரிசையில் பேட்டர்களின் பலவீனம் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆனால், பந்துவீச்சில் இந்த உலகக்கோப்பையில் எந்த அணியும் சாதிக்காத வகையில் 57 விக்கெட்டுகளை வீழ்த்தி, 6.35 எக்கானமி வைத்து தென் ஆப்ரிக்காவுக்கு (6.10) அடுத்தாற்போல் இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஃபரூக்கி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னணியில் இருக்கிறார்.

ஆக பந்துவீச்சில் தென் ஆப்ரிக்காவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் வலிமையாகவே ஆப்கானிஸ்தான் இருக்கிறது. ஒருவேளை 150 ரன்களுக்கு மேல் ஆப்கானிஸ்தான் அணி ஸ்கோர் செய்துவிட்டால், தென் ஆப்ரிக்கா அணிக்கு நிச்சயம் நெருக்கடி அளித்து வெல்லக்கூடிய திறமையும் இருக்கிறது.

வலுவான தொடக்க ஜோடி

குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடக்க வீரர்கள் குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரன்

பேட்டிங்கில் குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரன் இருவரும் அளித்த தொடக்கம்தான் பல போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பெரிய ஸ்கோர் அடிக்க உதவியுள்ளது.

அதிலும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் குர்பாஸ் 281 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தியா, பிஎன்ஜி, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மட்டுமே இந்த ஜோடி ஜொலிக்காமல் இருந்துள்ளது, மற்ற அனைத்து ஆட்டங்களிலும் வலுவான தொடக்கத்தை அளித்துள்ளனர்.

பலவீனமான நடுவரிசை பேட்டிங்

பலவீனமான பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images

நடுவரிசையில் பெரிதாக எந்த பேட்டரும் நினைவில் நிற்கும் வகையில் ஸ்கோர் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் நடுவரிசை பேட்டிங் இந்த உலகக்கோப்பைத் தொடரில் மோசமாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக 4 முதல் 7 வரையிலான பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட் 102 எனக் குறைவாக இருக்கிறது.

சூப்பர் 8 வந்துள்ள 8 அணிகளில் இது மிகக் குறைவு. கிளாசனை இதுவரை ஒருமுறையும், மில்லரை 4 முறையும் ரஷித் கான் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆதலால் ரஷித் கான் பந்துவீச்சு இவர்களுக்கு சவாலாக இருக்கும்.

ஆதலால், தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் நன்கு திட்டமிட்டு, வியூகங்களை வகுத்து தொடக்கத்திலேயே ஜாத்ரன், குர்பாஸ் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், ஆப்கானிஸ்தான் சரிவு உறுதியாகும், பெரிதாக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது.

தென் ஆப்ரிக்காவிலும் கேசவ் மகராஜ், இடதுகை மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் தப்ரியாஸ் ஷம்ஸி, மார்க்ரம் ஆகியோரும் ஆப்கானிஸ்தானுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். அதிலும் ஆப்கானிஸ்தானின் வலதுகை பேட்டர்களுக்கு மகராஜ், ஷம்ஸி நிச்சயம் அச்சுறுத்தல் விளைவிப்பார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே கரீபியனில் சிபிஎல் டி20 லீக்கில் விளையாடிய அனுபவம் இருப்பதால், அரையிறுதி நடக்கும் டரூப் ஆடுகளத்தில் நன்கு பந்துவீசுவார்கள்.

தோல்வியின்றி தெ.ஆப்ரிக்கா பயணம்

தோல்வியின்றி தெ.ஆப்ரிக்கா பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணி

தென் ஆப்ரிக்க அணி இந்த உலகக்கோப்பைத் தொடங்கியதில் இருந்து 7 ஆட்டங்களாக ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் பயணித்து வருகிறது. இருப்பினும் சில போட்டிகளில் மிகவும் போராடித்தான் தென் ஆப்ரிக்கா வென்றது என்பதையும் மறந்துவிடக்கூடாது. கத்துக்குட்டி நேபாளம் அணியிடம் ஒரு ரன்னில் வெற்றி, வங்கதேசத்திடம் 4 ரன்னில் வெற்றி, மேற்கிந்தியத் தீவுகளை 3 விக்கெட்டில் வென்றது எனப் போராடித்தான் தென் ஆப்ரிக்கா வென்றது.

கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு எதிரணி நெருக்கடி அல்லது அழுத்தம் தந்தால் அவர்களின் இயல்பான குணம் வெளிப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை தங்களைக் கட்டுப்படுத்தி விளையாடி, தங்கள் பலவீனத்தை மறைத்துள்ளனர்.

தென் ஆப்ரிக்கா அணியோ, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் வீழ்த்தி 2024ஆம் ஆண்டு தங்களுடையது என முழுக்கமிட்டுள்ளது. இதுவரை எந்த அணியும் உலகக்கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவலை தரும் தென் ஆப்ரிக்க பேட்டர்கள்

தென் ஆப்ரிக்க வீரர் டீ காக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லீக் சுற்றில் மோசமாக ஆடிய தென் ஆப்ரிக்க வீரர் டீ காக் சூப்பர் 8 சுற்றில் ஃபார்முக்கு வந்துவிட்டார்.

தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இதுவரை தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் ஒரு போட்டியில்கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

லீக் சுற்றில் மோசமாக ஆடிய டீ காக் சூப்பர் 8 சுற்றில் ஃபார்முக்கு வந்துவிட்டார். 199 ரன்களுடன் டீ காக் மட்டுமே அதிகமான ரன்கள் சேர்த்த பேட்டர்களில் 6வது இடத்தில் இருக்கிறார்.

இதுவரை தென் ஆப்ரிக்காவின் முக்கிய பேட்டர்கள் மார்க்ரம், கிளாசன், மில்லர், ஸ்டெப்ஸ் ஆகியோர் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடக்கூடிய திறமையான பேட்டர்களாக இருந்தாலும், பெரிய ஸ்கோர் இவர்களிடம் இருந்து வரவில்லை.

'மேட்ச் வின்னிங்' ஆட்டமும் வரவில்லை என்பது கவலைக்குரியது. கடைசி வரிசையில் ஓரளவு நின்று பேட் செய்ய யான்சென், ரபாடா உள்ளனர்.

மாற்றம் வருமா?

பேட்டிங்கில் ஆப்கானிஸ்தான் அணியைவிட தென் ஆப்ரிக்கா வலிமையாகவே இருக்கிறது. வேகப்பந்துவீச்சில் நோர்க்கியா, ரபாடா, பார்ட்மேன், யான்சென் ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் கேசவ் மகராஜ், ஷம்சி, மார்க்ரம் ஆகியோரும் உள்ளனர். டரூபா ஆடுகளத்தில் பந்து நன்கு பவுன்ஸாகும் என்பதால், ஷம்சிக்கு பதிலாக பார்ட்மேன் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

அவப்பெயர் மாறுமா?

தென் ஆப்ரிக்க அணி

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்க அணி இதுவரை ஐசிசி நடத்திய ஒருநாள், டி20 உலகக்கோப்பைத் தொடரில் பல சோதனைகளைச் சந்தித்து, பலமுறை அரையிறுதி, காலிறுதியோடு வெளியேறியுள்ளது. அது மட்டுமல்லாமல் மற்ற போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய தென் ஆப்ரிக்க அணியினர் ஐசிசி நடத்தும் தொடரில் நாக்-அவுட் போட்டியின் போது 'சோக்கர்ஸ்' (Chockers) (அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தோல்வியுறுதல்) ஆகிவிடுகிறார்கள் என்ற அவப்பெயர் தொடர்ந்து வருகிறது.

இதனால்தான் இதற்கு முன் தென் ஆப்ரிக்க அணியில் பல ஜாம்பவான்கள், திறமையான வீரர்கள் இருந்தும் இதுவரை அரையிறுதியைக்கூட தென் ஆப்ரிக்க அணி கடந்தது இல்லை.

இந்த முறை அந்த அவப்பெயரை மாற்றி அரையிறுதியைக் கடந்து பைனலில் வென்று, முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருப்புச்சீட்டுகள்

 நவீன் உல் ஹக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக்

ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் அரையிறுதி ஆட்டத்தில் முக்கியத் துருப்புச்சீட்டாக அந்த அணிக்கு இருப்பார். வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் எடுத்த விக்கெட்டுகள் தான் ஆட்டத்தையே மாற்றின. குறிப்பாக டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பின் ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில் சிக்கியது. பவர்ப்ளே ஓவரில் ஃபரூக்கியுடன் சேர்ந்து நவீன் பந்துவீசும் போது அவருக்கான அழுத்தம் குறையும்.

மேலும், பிராவோவின் வழிகாட்டலில் பந்துவீச்சில் அதிகமான வேரியேஷன்களை (Variation) நவீன் உல்ஹக் பயன்படுத்தி வருகிறார். ஸ்விங், சீமிங், ஸ்லோவர் பால், கட்டர்கள் நவீன் பந்துவீச்சில் அதிகமாக இருப்பது தேவையான நேரத்தில் விக்கெட்டை வழங்கும். அதிலும் கரீபியன் ஆடுகளத்தில் வீசப்படும் ஸ்லோவர் பந்துகளை அடிக்க பேட்டர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.

அதேபோல தென் ஆப்ரிக்காவின் கிளாசன், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பேட்டர். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தும். 2023இல் இருந்து கிளாசன் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 182 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து வருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் ஆடிய 41 சிறந்த பேட்டர்களில் கிளாசன் தான் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

குர்பாஸ் விளையாடுவாரா?

குர்பாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குர்பாஸுக்கு முழங்காலில் சிறிய வீக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய பேட்டரான குர்பாஸுக்கு முழங்காலில் சிறிய வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக முகமது இஷ்காக் கீப்பிங் செய்தார். டரூபா ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை பயிற்சியில் ஈடுபடவில்லை, குர்பாஸும் மைதானத்துக்கு வரவில்லை.

ஒருவேளை குர்பாஸின் உடல்நிலை முழுமையாகத் தேறாவிட்டால், அவருக்குப் பதிலாக ஹஸ்ரத்துல்லா ஜஜாய் களமிறங்கலாம் எனத் தெரிகிறது. விக்கெட் கீப்பிங் பணிக்கு முகமது இஷ்காக் வரவழைக்கப்படலாம்.

ஆடுகளம் எப்படி?

பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம்

மேற்கிந்தியத் தீவுகளின் மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது அந்தக் காலம். இப்போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சு, மிதவேகப்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டுள்ளது. டரூபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இந்த உலகக்கோப்பையின் 5வது மற்றும் கடைசி ஆட்டம் நடக்கிறது. இந்த ஆடுகளத்தில் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம்.

இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு பவுன்ஸாகும். இந்த ஆடுகளத்தில் இதுவரை உலகக் கோப்பையில் 4 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதிகபட்சமாக 149 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் 150 ரன்கள் சேர்த்தாலே நல்ல ஸ்கோர்தான், அதை டிபெண்ட் செய்துவிடலாம். சேஸிங் செய்யும் அணி 100 ரன்களை கடப்பது, 'கடப்பாறையை முழுங்கும்' செயல்தான்.

இரவு நேரத்தில் பனிப்பொழிவும் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்வதில் முக்கியக் காரணியாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வது சிறப்பாகும்.

இதுவரை சர்வதேச அரங்கில் இரு அணிகளும் இருமுறை மோதி அதில் இரண்டிலும் தென் ஆப்ரிக்காவே வென்றுள்ளது. ஐசிசியில் முழுநேர உறுப்பினர்களாக இருக்கும் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளை மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை வென்றதில்லை.

அணிகளின் பலத்தைப் பொறுத்தவரை தென் ஆப்ரிக்கா வலிமையாக இருந்தாலும், எந்த அணிக்கும் எதிர்பாரா நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் வல்லமை கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. ஆகையால், எதுவும் நடக்கலாம். ஆனால், தென் ஆப்ரிக்காவின் கடந்த கால வரலாறு மட்டும் அவர்களுக்கு நினைவில் வரக்கூடாது.

ஆப்கானிஸ்தான்(உத்தேச அணி):

ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் ஜாத்ரன், ரஹ்மத்துல்லா குர்பாஸ் அல்லது ஹஸ்ரத்துல்லா ஜஜாய், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய், குல்புதீன் நயீப், முகமது நபி, கரீம் ஜனத் அல்லது முகமது இஷ்காக், கரோட்டே, நவீன் உல் ஹக், நூர் அகமது, பசல்ஹக் ஃபரூக்கி

தென் ஆப்ரிக்கா (உத்தேச அணி):

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டீ காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ட்ரிக்ஸ் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகியோ ரபாடா, ஆன்ரிச் நோக்கியா, தப்ரியாஸ் ஷம்சி அல்லது பார்ட்மேன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)