பாகிஸ்தானில் முதலீடு செய்ய சீனா புதிய நிபந்தனை - இருநாட்டு உறவில் என்ன நடக்கிறது?

சீனா - பாகிஸ்தான் உறவு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அசாம் கான்
  • பதவி, பிபிசி உருது

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான 'அஸ்ம்-இ-இஸ்தேகாம்' (Azm-e-Istehkam) என்னும் 'நிலைத்தன்மைக்கான தீர்வு’ நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்த போது, ​"ராணுவத்திடம் பாதுகாப்புப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் மாநில அரசுகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது” என்று கூறினார்.

முன்னதாக சீன அமைச்சர் லியோ ஜியான் சாவோ, சீனா பாகிஸ்தானில் முதலீடு செய்வது, உள்நாட்டின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அமைப்பை சார்ந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.

ஷெரீஃப் தலைமையில் நடைபெற்ற தேசிய செயல் திட்டத்திற்கான மத்திய உச்சக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. நாட்டில் சீன குடிமக்களின் பாதுகாப்பு குறித்து 'எஸ்ஓபி' உருவாக்குவது குறித்து பேசப்பட்டது மட்டுமல்லாமல், தீவிரவாதத்தை ஒழிக்க 'அஸ்ம்-இ-இஸ்தேகாம்' (Resolve for Stability) என்ற புதிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

சீனா-பாகிஸ்தான் நட்புறவு இருந்த போதிலும், பாகிஸ்தானில் முதலீடு செய்ய சீனா உள்நாட்டு நிலைத்தன்மையை ஏன் கோரியது என்றும், சீனா இன்னும் பாகிஸ்தானில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

பிபிசி

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தானும் சீனாவும் எதிர்பார்ப்பது என்ன?

சீனா பாகிஸ்தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதா?

பட மூலாதாரம், GOP

இஸ்லாமாபாத்தில் 'பாகிஸ்தான்-சீனா ஆலோசனை செயல்முறை' கூட்டத்தில் உரையாற்றிய சீன அமைச்சர் லியோ ஜியான் சாவோ, பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும், ஆனால் வளர்ச்சிக்கு "உள்நாட்டு நிலைத்தன்மை அவசியம்" என்று கூறினார்.

சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு இருந்தால், தொழிலதிபர்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்வார்கள் என்று லியோ ஜியான் சாவோ கூறினார் .

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு (China–Pakistan Economic Corridor - சிபிஇசி) பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெரும் தடையாக இருப்பதாக சீன அமைச்சர் குறிப்பிட்டார்.

தங்கத்தை விட `நம்பிக்கை’ மிகவும் மதிப்புமிக்கது என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் சீன மூலதன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைக்கும் வகையில் பாதுகாப்புச் சூழல் உள்ளது என்றார்.

பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தனது உரையில், "சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை வலியுறுத்தி, இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் பாகிஸ்தான்-சீனா நட்புறவை மேலும் வலுப்படுத்தும்" என்று கூறினார்.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (சிபிஇசி) தொடர்பான விவகாரங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான குர்ரம் ஹுசைன், மூலதன முதலீடு தொடர்பாக பாகிஸ்தானும் சீனாவும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன என்று கருதுகிறார்.

"தகவல் தொழில்நுட்பத் துறையில் மூலதன முதலீடு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கூறும் நிலையில், ​​`உங்கள் நாட்டை ஒழுங்குபடுத்துங்கள்’ என்று சீனா கூறுகிறது’’ என்று அவர் பிபிசியிடம் கூறினார். சீனா தற்போது மூலதன முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அவரைப் பொருத்தவரை, சீனா இப்போது தனது கடனை திரும்பப் பெற விரும்புகிறது. அதேசமயம், சீனர்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்ய வரிசையில் காத்திருப்பது போல பாகிஸ்தான் கூறுகிறது.

'அஸ்ம்-இ-இஸ்தேகாம்' நடவடிக்கையை தொடங்க ஒப்புதல்

சீனா பாகிஸ்தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதா?

பட மூலாதாரம், Getty Images

சீன அமைச்சர் லியோ ஜியான் சாவோ, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

அந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, பிரதமர் தலைமையில் தேசிய செயல்திட்டத்தின் உச்சக் குழுவின் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ராணுவத்தின் நடவடிக்கையான 'அஸம்-இ-இஸ்தேகாம்' தொடங்க சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய செயல் திட்டத்தின் உச்சக் குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், நாட்டை ஒரு அமைப்புக்காக விட்டுக் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்று கூறினார்.

நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு நிலைத்தன்மை மற்றும் சட்டப்படியான ஆட்சி அவசியம் என்று ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார். நாட்டின் சட்டத்தை அமல்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பு என்றார்.

"தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் முழு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நமது அரசியல் மற்றும் மதத் தலைமை முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

"பாகிஸ்தானில் பாதுகாப்பு மேம்படும் வரை சீனா முதலீடு செய்யாது"

சீனா பாகிஸ்தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதா?

பட மூலாதாரம், Getty Images

டாக்டர் வசீம் இஷாக் இஸ்லாமாபாத்தில் உள்ள நாமல் பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வு மையத்தின் இயக்குநராக உள்ளார்.

பாகிஸ்தானில் 26 பில்லியன் டாலர் முதலீட்டில் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (சிபிஇசி) முதல் கட்டத்தை சீனா கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார். அவர் கருத்துப்படி, அதில் சுமார் 60 திட்டங்கள் அடக்கம், அவற்றில் பெரும்பாலானவை உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையுடன் தொடர்புடையவை.

துரதிர்ஷ்டவசமாக கடந்த 10 ஆண்டுகளில் சீன குடிமக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அதில் உயிரிழப்புகள் நடந்திருப்பதாகவும் அவர் கூறினார். சீனா அதன் குடிமக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாததால், பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருக்கும் இடத்தில் மட்டுமே மூலதனத்தை முதலீடு செய்ய சீனா முடிவு செய்துள்ளது.

மேலும் பேசிய அவர், "நிலைத்தன்மை மற்றும் சீன குடிமக்களின் பாதுகாப்பு ஆகிய இரண்டு விஷயங்களும் பாகிஸ்தானில் மேம்படும் வரை பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று சீனா முடிவு செய்துள்ளது. " என்றார்.

அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் தெளிவான நடவடிக்கைகளை எடுக்கும் வரை சீனா இரண்டாம் கட்டத்திற்கு நகராது என்கிறார்.

பொருளாதார வழித்தடம் பற்றிய தகவல்களை வழங்கிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் சீன வருகையின் போது, ​​திட்டங்களை மேம்படுத்த ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது என்று கூறினார்.

"சிபிஇசி -இன் அடுத்த கட்டத்தில் தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் வர்த்தக மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க பல வாய்ப்புகள் ஆராயப்பட்டுள்ளன." என்றார்.

'சீனா - பாகிஸ்தானின் நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன'

சீனா பாகிஸ்தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதா?

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் நக்மனா ஹஷ்மி பிபிசியிடம் கூறுகையில், சீனா பாகிஸ்தானை குறிப்பிட்டு இவ்வாறு கூறுவது சகஜமான விஷயம், ஏனெனில் சீனா இதை ஒரு நட்பு நாடாக இருந்து கூறுகிறது. நக்மனா கருத்துப்படி, இரு நாடுகளும் ஒரே சிந்தனையைக் கொண்டுள்ளன.

சீனாவின் விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான், பிபிசியிடம், சீனாவுக்கு நீண்டகாலமாக பாகிஸ்தானை பற்றி இந்த அச்சங்கள் உள்ளன என்று கூறினார்.

பாகிஸ்தான் இந்த அச்சங்களை நீக்குவதாக சீனாவுக்கு உறுதி அளித்து வருகிறது என்கிறார் அவர்.

டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மானின் கூற்றுப்படி, ``சீனாவின் அணுகுமுறை முதலில் பிரச்னையை சுட்டிக்காட்டுகிறது, பின்னர் அதை பாகிஸ்தானுடன் இணைந்து தீர்க்கிறது. பொருளாதார பிரச்னைகளை பாகிஸ்தான் குறிப்பிடும் விதத்திலேயே சீனா புரிந்து கொண்டது. ஆனாலும் பாகிஸ்தான் சீனாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும்’’ என்கிறார்.

மேலும், சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, மேலும் சீனா இனி பாகிஸ்தானுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது என்று கருதுவது சரியல்ல என்று ஃபஸ்லுர் ரஹ்மான் கருதுகிறார்.

நக்மனா ஹாஷ்மியும் இதற்கு உடன்படுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, சீனா இந்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று பாகிஸ்தானுக்கு அங்கிருந்து நவீன தொழில்நுட்பம் வந்திருக்காது.

சீனா உடனான பொருளாதாரத் திட்டங்களால் பாதுகாப்புப் பிரிவை மேலும் சுறுசுறுப்பாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று டாக்டர் வாசிம் கூறுகிறார்.

"உளவுத்துறைகள் கலந்தாலோசித்து பணிப்புரிய வேண்டும். சீன குடிமக்களுக்கு 'ஆன்-சைட்' பாதுகாப்பு தேவை. அவர்களின் பயணத்தின் போது அவர்களுக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.” என்று விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, "அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், இரான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடனான விவகாரங்களில் பாகிஸ்தான் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு வெளியே நடக்கும் நடவடிக்கைகள் உளவுத்துறை பகிர்வு மூலம் நிறுத்தப்பட வேண்டும். இது சீன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்.” என்கிறார்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடப் (சிபிஇசி) பணி மெதுவாக நடப்பது ஏன்?

சீனா பாகிஸ்தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதா?

பட மூலாதாரம், Getty Images

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முதல் கட்டம் நன்றாகத் தொடங்கியதாக டாக்டர் வாசிம் கூறுகிறார். அதன் கீழ் சாலைகள் அமைக்கப்பட்டன, புதிய மோட்டார் பாதைகள் கட்டப்பட்டன மற்றும் ஆற்றல் திட்டங்களின் வேலைகளும் ஆரம்பித்தது.

"பயங்கரவாத தாக்குதல்களால் மூலதன முதலீட்டு பணிகள் பாதிக்கப்பட்டன." என்று விளக்கினார்.

டாக்டர் வாசிம் கருத்துப்படி, "எங்கள் தரப்பில் ஒரு அரசியல் முட்டுக்கட்டை இருந்தது, முடிவெடுப்பதில் சில சிக்கல்கள் மற்றும் வசதிகளை வழங்குவதில் சில தடைகள் இருந்தன, இதன் காரணமாக இப்போது சிபிஇசி திட்டங்கள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன."

அவரைப் பொறுத்தவரை, இப்போது சீன குடிமக்களுக்கு 100 சதவீத பாதுகாப்பு கிடைக்காத வரை, பொருளாதார வழித்தடப் பணிகள் வேகமாக முன்னேற முடியாது என்று சீனா கூறுகிறது.

டாக்டர். நக்மனாவின் கூற்றுப்படி, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்தில் தனியார் மூலதன முதலீட்டிற்கு சாதகமான சூழல் இருக்க வேண்டியது முக்கியம்.

அவர் கூறுகையில், "காரகோரம் நெடுஞ்சாலை கட்டுமானத்துடன் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் பணிகளில் முன்னேற்றம் வந்தது." என்றார்.

அவரது கருத்துப்படி, கடந்த 10 ஆண்டுகளில் சிபிஇசி-இல் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் இப்போது பொருளாதார மண்டலம் கட்டப்பட வேண்டுமானால் பாகிஸ்தான் தரப்பு தாமதம் செய்கிறது. அதில் சீனாவின் தவறு இல்லை.

"பாகிஸ்தானின் மெதுவான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், அப்போதுதான் மூலதன முதலீட்டிற்கான வழி திறக்கும்." என்கிறார்.

"சீனா உடனான சிபிஇசி-திட்டப் பணிகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முடிக்கப்பட உள்ளது. இந்த அரசாணையில் 80 முதல் 90 சதவீதம் பணிகள் நிறைவடையும் என நம்புகின்றனர்.” என்று விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, “ சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் என்பது BRI (Belt and Road Initiative) இன் முதன்மைத் திட்டமாகும். இப்போது அனைத்து கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்து விவாதிப்பது நல்ல முன்னேற்றம். நாட்டிற்குள் ஒற்றுமையான உரையாடல் மற்றும் பெரிய நல்லிணக்கம் தேவை.” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)