ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்? பிபிசிக்கு பேட்டி

ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா
படக்குறிப்பு, மறைந்த ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் முதல் மனைவி உம் ஹுதைஃபா தற்போது இராக்கில் சிறையில் உள்ளார்.
  • எழுதியவர், ஃபெராஸ் கிளியர்
  • பதவி, பிபிசி அரபு

உம் ஹுதைஃபா அபுபக்கர் - இவர் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் முதல் மனைவி. அல்-பாக்தாதி தற்போது உயிருடன் இல்லை. சிறையில் உம் ஹுதைஃபா தன் வாழ்வை கழித்து வருகிறார்.

அபுபக்கர் அல்-பாக்தாதி சிரியா மற்றும் இராக்கின் பெரும்பகுதிகளில் ஐஎஸ் ஆட்சியை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்த போது உம்மு ஹுதைஃபாவை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு அரிய நேர்காணலில், சிறையில் இருந்தபடியே உம் ஹுதைஃபா தன் திருமண வாழ்க்கை பற்றியும் கணவர் பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வரும் அவர் தற்போது இராக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு கோடையில், உம் ஹுதைஃபா சிரியாவில் ஐஎஸ்- இன் கோட்டையான ரக்காவில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

அபுபக்கர் அல்-பாக்தாதி அடிக்கடி தான் வசிக்கும் பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு சென்று நேரத்தைச் செலவிட்டார், அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் போது அவர் தனது இரண்டு இளம் மகன்களை அழைத்துச் செல்ல ஒரு காவலாளியை வீட்டிற்கு அனுப்பினார்.

"சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களை அழைத்து செல்வதாக காவலாளி என்னிடம் சொன்னார்.” என்கிறார் உம் ஹுதைஃபா.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரகசிய தொலைக்காட்சிப் பெட்டி

 ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஜூலை 2014 இல் மொசூலில் உள்ள அல்-நூரி பெரிய மசூதியில் அபு பக்கர் அல்-பாக்தாதி பேசிய காட்சி.

வீட்டில் இருந்த ஒரு தொலைக்காட்சி பெட்டியை, ஹுதைஃபா ரகசியமாக பார்ப்பது வழக்கம்.

"அவர் வீட்டில் இல்லாத போது நான் தொலைக்காட்சியை ஆன் செய்து பார்ப்பேன்," என்று அவர் கூறுகிறார், அது வேலை செய்யவில்லை என்று அபுபக்கர் நினைத்தார்.

ஹுதைஃபா வெளி உலக சூழலில் இருந்து தான் துண்டிக்கப்பட்டதாகவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சியைப் பார்க்கவோ அல்லது மொபைல் போன் போன்ற வேறு எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவோ தன் கணவர் அனுமதிக்கவில்லை என்றும் அவர் விவரிக்கிறார்.

காவலாளி தன் பிள்ளைகளை அழைத்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் தொலைக்காட்சியை ஆன் செய்து பார்த்த போது, "ஒரு பெரிய ஆச்சரியம்" காத்திருந்ததாக கூறுகிறார். தனது கணவர் வடக்கு இராக் நகரமான மொசூலில் உள்ள அல்-நூரியின் பெரிய மசூதியில் உரையாற்றுவதை ஹுதைஃபா பார்த்தார், தன் கணவரை முதன்முறையாக சுயமாக அறிவித்துக் கொண்ட இஸ்லாமிய கலிபா தலைவராக பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரின் கீழ் இருந்த ஆயுதக்குழுவினர் அப்பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு அல்-பாக்தாதி பொதுவெளியில் தோன்றினார். அதுவும் தனது நீண்ட தாடியுடன், கருப்பு ஆடை அணிந்து, முஸ்லிம்களிடம் விசுவாசத்தைக் கோரும் நபராக காட்சியளித்தார். உலகம் முழுவதும் அவரது காணொளி பகிரப்பட்டது. இராக் மற்றும் சிரியா முழுவதும் ஐஎஸ்-க்கு இது ஒரு முக்கிய தருணமாக இருந்தது

தனது மகன்கள், யூப்ரடீஸ் நதியில் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு அழைத்து செல்லப்படாமல், தன் கணவருடன் மொசூலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக உம் ஹுதைஃபா கூறுகிறார்.

கூச்சல் நிறைந்த சிறைச்சாலை

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள நெரிசலான சிறைச்சாலையின் காட்சிகளை அவர் விவரிக்கிறார். ஐஎஸ் அமைப்பினர் செய்த குற்றங்களில் ஹுதைஃபாவுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்பது பற்றி இராக் அதிகாரிகள் விசாரிப்பதற்காக சிறையில் அவரை அடைத்து வைத்திருந்தனர்.

போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் தொழில் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் சிறைச்சாலையில் கூச்சல் நிறைந்திருந்தது.

நாங்கள் அங்கிருந்த நூலகத்தில் அமைதியான இடத்தை தேடிக் கண்டுபிடித்து அமர்ந்து கொண்டோம். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினோம். எங்கள் உரையாடலின் போது ஹுதைஃபா தனது கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக தன்னை முன்னிறுத்துகிறார். ஐஎஸ் அமைப்பின் மிருகத்தனமான செயல்களில் தனக்கு பங்கில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.

ஐஎஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த யாசிதி (Yazidis) பெண்கள் விவரித்த சம்பவங்களுக்கு நேர்மாறாக ஹுதைஃபா பேசுகிறார். ஐஎஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் அடிமைப்படுத்துவதில் ஹுதைஃபாவின் பங்களிப்பு இருந்தது என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா

பட மூலாதாரம், Iraqi Intelligence Service

படக்குறிப்பு, 2003 இல் எடுக்கப்பட்ட இப்ராஹிம் அவத் அல்-பத்ரியின் பழைய சிசிடிவி காட்சிகள், அதன் பின்னர் அவர் அல்-பாக்தாதி என்று அழைக்கப்பட்டார் - இது இராக் உளவுத்துறையால் வழங்கப்பட்ட படம்

உம் ஹுதைஃபா யார்?

இந்த நேர்காணலின் போது, ​​ஹுதைஃபா ஒரு முறை கூட தலையை உயர்த்தவில்லை. அவர் கறுப்பு மேலங்கி அணிந்திருக்கிறார், அவர் முகம் கூட முழுமையாக தெரியவில்லை.

உம் ஹுதைஃபா 1976 இல் ஒரு பழமைவாத இராக்கிய குடும்பத்தில் பிறந்தார். 1999 இல் அபுபக்கர் அல்-பாக்தாதி என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட இப்ராஹிம் அவாத் அல்-பத்ரியை மணந்தார்.

அவர் பாக்தாத் பல்கலைக் கழகத்தில் ஷரியா/ இஸ்லாமிய சட்டத்தை படித்து முடித்திருந்தார். மேலும் அந்த சமயத்தில் அவர் "மதவாதியாக இருந்தேன் ஆனால் தீவிரவாதி அல்ல... பழமைவாதி தான் ஆனால் திறந்த மனதுடன் இருந்தேன்" என்று விளக்கினார்.

இராக் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்கு (2004 இல்) ஒரு வருடம் கழித்து, அமெரிக்கப் படைகள் அல்-பாக்தாதியை கைது செய்து அவரைத் தெற்கில் உள்ள கேம்ப் புக்காவில் உள்ள தடுப்பு மையத்தில் சுமார் ஒரு வருடம் வைத்திருந்தனர். அவருடன் ஐஎஸ் மற்றும் பிற ஜிஹாதி குழுக்களில் மூத்த நபர்களும் இருந்தனர். அதன் பிறகு அல்-பாக்தாதி விடுவிக்கப்பட்டார்.

அவர் விடுவிக்கப்பட்ட சில வருடங்களுக்கு பிறகு முற்றிலுமாக மாறி விட்டதாக ​​ஹுதைஃபா கூறுகிறார் : "அவர் சட்டென ஆவேசம் கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தார். அதீத கோபத்தை வெளிப்படுத்தினார்." என்கிறார்.

அல்-பாக்தாதியை பற்றி நன்கு அறிந்த மற்றவர்கள், அவர் புக்காவில் அடைத்து வைக்கப்பட்டதற்கு முன்பிருந்தே அல்-கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள், ஆனால் ​​ஹுதைஃபாவை பொறுத்தவரை, தன் கணவர் சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு தான் தீவிரமடைந்தார் என்கிறார்.

"அவர் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்படத் தொடங்கினார்," என்று ஹுதைஃபா கூறுகிறார்.

ஏன் அவர் அப்படி ஆனார் என்று கேட்டபோது, ​​"உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு சம்பவம் அவருக்கு நடந்ததிருக்கும்” என்று கூறினார்.

​​ஹுதைஃபா வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், "புக்காவில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது தன் கணவர் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்" என்று அவர் நம்புகிறார்.

இராக்கில் அமெரிக்காவால் நடத்தப்படும் மற்றொரு சிறைச்சாலையான அபு கிரைப் குறித்து அந்த ஆண்டு முக்கியமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியானது. கைதிகள் பாலியல் செயல்களை உருவகப்படுத்தவும் ஆபாசமான போஸ்களை கொடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதை அந்த புகைப்படங்கள் காட்டின.

நாங்கள் அவரது குற்றச்சாட்டை அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனிடம் கூறி விளக்கம் கேட்டோம். ஆனால் பதில் கிடைக்கவில்லை.

அல்-பாக்தாதியை சந்தேகித்த ஹுதைஃபா

 ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 2004 இல், பாக்தாத்தின் தென்கிழக்கே 300 மைல்கள் (500 கிமீ) தொலைவில் அமெரிக்க நடத்திய புக்கா முகாம்

ஒரு கட்டத்தில் தன் கணவர் ஒரு தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவரா என்று யோசிக்க ஆரம்பித்ததாக அவர் சொல்கிறார். “அவர் வீட்டுக்கு வந்ததும் குளிக்க சென்றுவிடுவார். அந்த சமயத்தில் நான் அவருடைய ஆடைகளை ஆராய்வேன். போதையில் இருக்கும் போதும், தூங்கும் போதும் கூட அவரின் உடைமைகளை ஆராய்வேன். ஏதேனும் துப்புக் கிடைக்கிறதா என்று தேடுவது வழக்கம்.

"நான் அவரது உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று கூட தேடுவேன். எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நான் குழப்பமடைந்தேன்," என்று அவர் விவரித்தார்.

"ஒருநாள் நான் அவரிடம் 'நீங்கள் வழிதவறி விட்டீர்கள்' என்று சொன்னேன். அது அவரை கோபப்படுத்தி பொங்கி எழும் நிலைக்கு தள்ளியது." என்றார்.

ஹுதைஃபா தன் குடும்பத்துடன் எப்படி அடிக்கடி வீடு மாறினார், போலி அடையாளங்களை பயன்படுத்தினார்கள் மற்றும் அவரது கணவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டார் என்பதை விவரித்தார். தான் விவாகரத்து கேட்டதாகவும், ஆனால் கணவரிடம் தனது குழந்தைகளை விட்டுக் கொடுக்கும் நிபந்தனைக்கு உடன்படவில்லை என்றும், அதனால் அவருடன் தங்கியிருந்ததாகவும் கூறுகிறார்.

இராக்கில் 2006 முதல் 2008 வரை நீடித்த இரத்தக் களரி சூழல் நிலவும் போர் தொடர்ந்த சமயத்தில், தன் கணவர் சுன்னி ஜிஹாதி குழுக்களில் தொடர்புடையவர் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. 2010 இல் அல்-பாக்தாதி இராக்கின் ஐஎஸ் தலைவரானார். 2006 இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இராக்கிய ஜிஹாதி அமைப்புகளின் குழுவாகும்.

"நாங்கள் ஜனவரி 2012 இல் சிரியாவில் உள்ள இட்லிப் கிராமப்புறத்திற்கு குடி பெயர்ந்தோம். அங்கு அவர் தான் அமைப்பின் தலைவர் என்பது எனக்கு முற்றிலும் தெளிவாகத் தெரிந்தது" என்று ஹுதைஃபா கூறுகிறார்.

இராக்கின் ஐஎஸ் அமைப்பு பின்னர் ஒன்றிணைந்த குழுக்களில் ஒன்றாக இருந்தது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிபா ஆட்சியை ( caliphate) அறிவித்த இஸ்லாமிய அரசு குழுவை உருவாக்கியது. அந்த நேரத்தில், அவர் ஆப்கானிஸ்தான் உடை அணியத் தொடங்கினார், தாடி வளர்த்தார், எங்கு சென்றாலும் கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றார்.

நாட்டின் உள்நாட்டுப் போரின் போது வடமேற்கு சிரியாவில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், அவர்கள் கிழக்கே ரக்கா நகருக்கு குடிபெயர்ந்தனர், பின்னர் அது ஐஎஸ் "கலிபா" ஆட்சியில் உண்மையான தலைநகராகக் கருதப்பட்டது. ஹுதைஃபா கணவனை தொலைக்காட்சியில் பார்த்தது இந்த பகுதியில் வசித்த போது தான்.

ஐஎஸ் அமைப்பின் அட்டுழியம்

ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜூன் 2004 இல் ஐஎஸ் அமைப்பின் ஆயுதமேந்திய நபர் ரக்கா தெருக்களில் நடந்து செல்கிறார்

ஐஎஸ் அமைப்பில் ஒன்றுபட்ட குழுக்களின் அத்துமீறல்கள் ஏற்கனவே நன்கு அறியப்பட்டிருந்தாலும், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், அட்டூழியங்கள் மிகவும் பரவலாகவும் பயங்கரமாகவும் மாறியது.

இராக்கின் யாசிதி (Yazidis) சிறுபான்மையினருக்கு எதிராக ஐ.எஸ் இனப் படுகொலை செய்தது. கொலை, சித்திரவதை, கடத்தல் மற்றும் அடிமைப்படுத்துதல் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இக்குழு நடத்தியது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஐ.நா விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளின் தலையை துண்டித்தது, ஜோர்டான் விமானியை எரித்தது என அதன் அட்டூழியங்களை ஐஎஸ் அமைப்பு தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டது.

மற்றொரு மோசமான சம்பவத்தில், பாக்தாத்திற்கு வடக்கே உள்ள ஸ்பீச்சர் ராணுவத் தளத்திலிருந்து தங்கள் சொந்த நகரங்களுக்குத் திரும்பி கொண்டிருந்த போது, ​​1,700 ஷியா பிரிவைச் சேர்ந்த பயிற்சி இராக் படையினரை அது படுகொலை செய்தது .

ஐஎஸ் உறுப்பினர்களுடன் வாழச் சென்ற சில பெண்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை என்று கூறினர்.

எனவே நான் உம் ஹுதைஃபாவின் கருத்துகளை கேட்டேன். "அந்த சமயத்தில் அவர்கள் வெளியிட்ட படங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கொடுமையாக இருந்தது. அவர்களின் அட்டூழியங்கள் "பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது, மனிதாபிமானமற்றது" என்றும், "அநியாயமாக ரத்தம் சிந்த வைப்பது ஒரு பயங்கரமான விஷயம் என்றும், அந்த வகையில் அவை மனித குலத்தின் மனித உரிமைகளின் எல்லையைத் தாண்டிவிட்டன" என்றும் அவர் கூறுகிறார்.

அந்த அப்பாவி மக்களின் ரத்தம் தன் கணவரின் கைகளில் படிந்திருப்பதை பற்றி அவர் தனது கணவரிடம் கேள்வி எழுப்பி, "இஸ்லாமிய சட்டத்தின்படி அவர்களை மனம் திரும்புவதற்கு வழி காட்டுவது போன்ற பிற விஷயங்களைச் செய்திருக்கலாமே" என்றும் கூறியதாக ஹுதைஃபா கூறுகிறார்.

தனது கணவர் அவரது மடிக்கணினியில் ஐஎஸ் தலைவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டார் என்பதை ஹுதைஃபா விவரிக்கிறார்.

மடிக்கணினியை பிரீஃப்கேஸில் வைத்து பூட்டி வைத்திருந்தார். "என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நான் அதனை பயன்படுத்த முயற்சித்தேன். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக எனக்கு எதுவும் தெரியாது. எனவே எப்படி ஆன் செய்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை முயற்சி செய்யும் போதும் அது என்னிடம் கடவுக்குறியீட்டை கேட்டது" என்று அவர் கூறுகிறார்.

ஹுதைஃபா தப்பிக்க முயற்சி செய்தார், ஆனால் ஒரு சோதனைச் சாவடியில் ஆயுதம் ஏந்தியவர்கள் அவரைக் கடந்து செல்ல அனுமதிக்க மறுத்து வீட்டிற்குத் திருப்பி அனுப்பினார்கள்.

அவர் தனது கணவரைப் பற்றி கூறுகையில், எனக்குத் தெரிந்தவரை "அவர் எந்த சண்டையிலும் அல்லது போரிலும் நேரடியாக பங்கேற்கவில்லை, ஐஎஸ் அமைப்பு மொசூலைக் கைப்பற்றிய போது அவர் ரக்காவில் இருந்தார். அதன் பின்னர் அவர் மொசூலுக்குப் பயணம் செய்தார்” என்கிறார்.

அந்த பிரசங்கம் முடிந்து சிறிது நேரத்தில் அல்-பாக்தாதி அவர்களின் 12 வயது மகள் உமைமாவை, குடும்ப விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த மன்சூர் என்ற நண்பருக்குத் திருமணம் செய்து வைத்தார். உம் ஹுதைஃபா தன் மகளின் திருமணத்தை தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவரது எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இராக் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், உமைமாவுக்கு ஏற்கனவே ஒரு முறை, எட்டு வயதில், சிரிய ஐஎஸ் செய்தித் தொடர்பாளருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருப்பினும், அல்-பாக்தாதி இல்லாத போது அந்த நபர் வீட்டிற்குள் செல்வதை அனுமதிக்க முதல் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அது உண்மையான திருமணம் அல்ல என்றும் அவர் கூறினார்.

யாசிதி பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திய ஐஎஸ்

 ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா
படக்குறிப்பு, உம் ஹுதைஃபாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட யாசிதி பெண்களில் ஹமீதின் மகளும் மருமகளும் அடங்குவர்.

ஆகஸ்ட் 2014 இல், ஹுதைஃபா பிறவி இதயக் குறைபாடுள்ள நசிபா என்ற மற்றொரு மகளைப் பெற்றெடுத்தார். அந்த சமயத்தில் தான் மன்சூர் ஒன்பது யாசிதி பெண்களையும் சிறுமிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்களின் வயது ஒன்பது முதல் 30 வரை இருக்கக்கூடும்.

அவர்கள் ஐஸ் அமைப்பால் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஒரு சிறிய பகுதியினர். அவர்கள் இனத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

ஹுதைஃபா அப்போது அதிர்ச்சியில் ஆழ்ந்ததாகவும், வெட்கி தலைகுனிந்ததாகவும் கூறுகிறார்.

அந்த குழுவில் இரண்டு இளம் பெண்கள் இருந்தனர், சமர் மற்றும் ஜீனா - (அவர்களின் உண்மையான பெயர்கள் அல்ல.) ஹுதைஃபா அவர்கள் ரக்காவில் உள்ள தனது வீட்டில் சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததாகக் கூறுகிறார். .

அதன் பின்னர் குடும்பம் மொசூலுக்கு குடிபெயர்ந்தது. சமர் மீண்டும் கொண்டு வரப்பட்டார். அவர்களுடன் சுமார் இரண்டு மாதங்கள் வரை தங்கினார்.

சமரின் தந்தை ஹமீதை நான் கண்டறிந்து பேசினேன். சமர் அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தை கண்ணீருடன் அவர் நினைவு கூர்ந்தார்.

ஹமீத் கூறுகையில், தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அவர்கள், தனது 26 குழந்தைகளுடன், இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் சின்ஜாரில் உள்ள கான்சூர் நகரத்தில் இருந்து கடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஹைமீத் அருகில் உள்ள மலைகளுக்கு சென்று தப்பி உள்ளார்.

சமர் உட்பட அவரது ஆறு குழந்தைகளை இன்னும் காணவில்லை. சிலர் ரொக்கப் பணம் செலுத்திய பின்னர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிகள் தீவிரவாதத்தில் இருந்து சுதந்திரமாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு வந்தனர்.

ஜீனா, அவரது மருமகள் ஆகியோர் வடக்கு சிரியாவில் சிக்கியதாக கருதப்படுகிறது. ஜீனாவின் சகோதரி சோட், ஹுதைஃபாவை சந்தித்ததில்லை. ஆனால் அடிமைப்படுத்தப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு ஏழு முறை விற்கப்பட்டார்.

ஹமித் மற்றும் சோத் ஆகியோர், யாசிதி சிறுமிகளை கடத்தி அடிமைப்படுத்திய குற்றச்சாட்டில் ஹுதைஃபாவுக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்தனர். அவரும் ஒரு ஆதரவற்ற பாதிக்கப்பட்ட பெண் தான் என்று அவர்கள் நம்பவில்லை, மேலும் ஹுதைஃபாவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோரினர்.

"எல்லாவற்றிற்கும் அவர் தான் பொறுப்பு. அவர் சிறுமிகளையும் பெண்களையும் தேர்வு செய்தார். ஹுதைஃபாவுக்கு சேவை செய்வதற்காகவும், அவரின் கணவருக்கு சேவை செய்வதற்காகவும் பெண்களை பயன்படுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த பெண்களில் என் சகோதரியும் ஒருவர்,” என்கிறார் சோட்.

வீடு திரும்பிய மற்ற பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

"அவர் குற்றவாளி அபுபக்கர் அல்-பாக்தாதியின் மனைவி, எனவே இவரும் அவரைப் போலவே குற்றவாளி." என்றார்.

சோட் உடனான எங்கள் நேர்காணலின் பதிவை ஹுதைஃபா முன்னிலையில் போட்டுக் காட்டினோம். அதற்கு அவர், “என் கணவர் ஒரு குற்றவாளி என்பதை நான் மறுக்கவில்லை,” என்றார்.

 ஐஎஸ் தலைவருடன் வாழ்ந்த நாட்களை விவரிக்கும்  உம் ஹுதைஃபா
படக்குறிப்பு, உம் ஹுதைஃபாவுக்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்த சோத்

“அவர்களுக்கு நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். அதே சமயம் என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்” என்றார்.

சிறிது காலம் கழித்து, ஜனவரி 2015 இல், கடத்தப்பட்ட அமெரிக்க உதவிப் பணியாளர் கெய்லா முல்லரைச் சந்தித்ததாக ஹுதைஃபா கூறினார். அவர் 18 மாதங்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.

கெய்லாவின் மரணம் தொடர்பாக சம்பவங்கள் இன்னும் அறியப்படவில்லை . அந்த நேரத்தில் அவர் ஜோர்டானிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஐஎஸ் அமைப்பு கூறியது, ஆனால் அமெரிக்கா இதை மறுத்து வருகிறது. இராக்கிய பாதுகாப்பு துறை, அவர் ஐஎஸ் அமைப்பால் கொல்லப்பட்டதாக எங்களிடம் கூறியது.

2019 ஆம் ஆண்டில், அல்-பாக்தாதி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலருடன் வடமேற்கு சிரியாவில் பதுங்கியிருந்த இடத்தில் அமெரிக்கப் படைகள் சோதனை நடத்தினர். பாக்தாதி ஒரு சுரங்கப் பாதையில் சுற்றி வளைக்கப்பட்ட போது ஒரு வெடிகுண்டு அங்கியை வெடிக்கச் செய்தார், தன்னையும் இரண்டு குழந்தைகளையும் தற்கொலைப்படை தாக்குதலில் கொன்றார். அதே நேரத்தில் அவரது நான்கு மனைவிகளில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இருப்பினும் இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஹுதைஃபா இல்லை. அவர் 2018 இல் கைது செய்யப்பட்டார். ஒரு போலியானப் பெயரில் துருக்கியில் வசித்து வந்தார். அவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் இராக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அதிகாரிகள் ஐஎஸ் அமைப்பில் அவரது பங்கை பற்றி விசாரித்து வருகின்றனர்.

அவரது மூத்த மகள் உமைமா அவருடன் சிறையில் இருக்கிறார், 12 வயதுடைய பாத்திமா இளைஞர் தடுப்பு மையத்தில் இருக்கிறார். அவரது மகன்களில் ஒருவர் ஹோம்ஸ் அருகே சிரியாவில் ரஷ்ய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார், மற்றொருவர் தனது தந்தையுடன் சுரங்கப் பாதையில் இறந்தார் மற்றும் இளைய பையன் ஒரு அனாதை இல்லத்தில் இருக்கிறார்.

நாங்கள் பேசி முடித்ததும், அவர் தலையை உயர்த்தினார், அவருடைய முழு முகத்தையும் நான் சில நொடிகள் பார்த்தேன், உளவுத்துறை அதிகாரி அவரை அழைத்துச் செல்லும் போது, ​​அவர் தனது குழந்தைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தற்போது அவர் மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)