காவலர்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் என முதல்வர் அறிவித்த திட்டம் என்ன ஆனது?

காவலர்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் என முதல்வர் அறிவித்த திட்டம் என்ன ஆனது?

பட மூலாதாரம், Getty Images/UGC

  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் சீருடையுடன் ஏறிய காவலர், பயணச்சீட்டை எடுக்க மறுத்து பேருந்தின் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியது. இறுதியில் உடனிருந்த பயணிகள் சமாதானப்படுத்தியதால் அந்தக் காவலர் பயணச்சீட்டை வாங்கினார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் பேருந்தில் காவலர்கள் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதியில்லை என அறிவித்துள்ளது. மேலும் நடத்துநருடன் வாக்குவாதம் செய்த காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அரசுப் பேருந்தில் ஒரு மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணம் செய்ய காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்று அறிவித்தார். அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

அரசுப் பேருந்தில் நடந்தது என்ன?

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, காவலர் ஆறுமுகப்பாண்டி

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் ஆறுமுகப்பாண்டி என்பவர் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் புழல் சிறையில் இருந்த கைதியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி கிளைச் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, கடந்த மே 21ஆம் தேதி சிறையில் ஒப்படைத்துள்ளார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தில், திருநெல்வேலி செல்வதற்காக ஏறியுள்ளார்.

பேருந்தின் நடத்துநர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு தாம் பணியில் இருப்பதால் பயணச்சீட்டு வாங்க முடியாது என மறுத்து வாக்குவாதம் செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.

அந்தக் காணொளியில் காவலர் ஆறுமுகப்பாண்டி, “உங்கள் ஸ்டாஃப்புக்கு (போக்குவரத்து பணியாளர்கள்) எப்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளிக்கிறீர்கள்? அவர்கள் பணிக்குச் செல்வதாக நீங்கள் கூறுகிறீர்கள், நானும் பணிக்குத்தான் செல்கிறேன்."

"டிக்கெட் எடுக்க முடியாது. 50 கி.மீ. தொலைவிற்குள் பயணம் செய்ய, காவலர்கள் பயணச் சீட்டு எடுக்க வேண்டிய அவசியமில்லை,” என வாக்குவாதம் செய்வதைக் காண முடிகிறது.

அதைத் தொடர்ந்து, சக பயணிகள் அவரை சமாதானம் செய்யவே காவலர் ஆறுமுகப்பாண்டி டிக்கெட் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் பேருந்து திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. பேருந்தின் நடத்துநர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார், அது உடனே வைரலானது.

‘காவலர்கள் பயணச் சீட்டின்றிப் பயணிக்க அனுமதியில்லை’

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்

காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த காணொளி வேகமாகப் பரவியதையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதில், “தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றிப் பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் ஏறி பயணச் சீட்டு எடுக்க மறுத்த காவலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டிருந்தது.

“தமிழ்நாடு அரசின் நகரப் பேருந்துகளில் காவலர்கள் ஏறி பயணம் செய்தால் அவர்களிடம் பயணச்சீட்டு கேட்பதில்லை, வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்தால் கண்டிப்பாக வாரன்ட் கேட்போம்,” என பிபிசி தமிழிடம் பேசிய போக்குவரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

‘சீருடைக் காவலர்களை இலவசமாக அனுமதிக்கலாம்’

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்
படக்குறிப்பு, முன்னாள் டிஜிபி என்.நடராஜ்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் டிஜிபி என்.நடராஜ், “காவலர்கள் மாவட்டங்களுக்குள் அவசரப் பணிகளுக்காக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி வழங்க வேண்டும். காவலர்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லும்போது காவல்துறையின் சார்பில் அதற்கான வாரன்ட் வழங்கப்படும். அதன்மூலம் அதைப் பயன்படுத்தி அவர்கள் பயணிக்க முடியும்," என்று தெரிவித்தார்.

முன்பு காவலர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக பல பிரச்னைகள் வந்துள்ளதாகக் கூறும் அவர், "அதற்கு மீண்டும் வழிவகுக்காமல் பேருந்தில் சீருடையில்லாமல் வரும் காவலர்களுக்கு மட்டும் பயணச் சீட்டை வாங்கச் சொல்லலாம், பணிக்குச் செல்லும் காவலர்கள் அடையாள அட்டையைக் காட்டினால் விலக்கு அளிக்கலாம்,” என்றார்.

காவலர்களுக்கு பயணச் சலுகை உண்டா?

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்

பட மூலாதாரம், Getty Images

இந்த சர்ச்சை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய, பெயர்கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், “தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் அரசு மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது போக்குவரத்து ஊழியர்கள் பயணச் சீட்டு கேட்பதில்லை. சில பேருந்தின் நடத்துநர்கள் மட்டும் வேண்டுமென்றே பயணச்சீட்டை எடுக்கக் கூறி தகராறில் ஈடுபடுவார்கள்," என்றார்.

தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்கள் பெரிய பரப்பளவைக் கொண்டவை. அப்படியிருக்கையில், "திடீரென பாதுகாப்புப் பணி அல்லது காவல்நிலையம் சார்ந்த பணிகளுக்காகச் செல்வதாக இருந்தால் அரசுப் பேருந்தைத்தானே காவல்துறையினர் நாடிச் செல்வார்கள்,” என்றும் தெரிவித்தார் பெயர் கூற விரும்பாத காவல்துறை அதிகாரி.

காவல்துறை உயரதிகாரிகளுக்கு பயணச் செலவு வழங்கப்படும் என்பதைக் குறிப்பிடும் அவர், கீழ்நிலையில் இருக்கும் காவலர்களுக்கு அந்தச் சலுகைகள் எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே, உள் மாவட்டத்திற்குள் காவலர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் அவர்.

முதலமைச்சரின் அறிவிப்பில் கூறப்பட்டது என்ன?

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்

பட மூலாதாரம், FACEBOOK

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு காவல்துறைக்கான மானியக் கோரிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்தார். அதில் காவல்துறைக்கு என மொத்தமாக 44 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், “காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பேருந்தில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக ‘நவீன அடையாள அட்டை’ (Smart Identity Card) வழங்கப்படும்”, எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் விதமாக கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி போக்குவரத்துத்துறை துணைச் செயலாளர் உதய பாஸ்கர் அப்போதைய காவல்துறையின் தலைவர் சைலேந்திர பாபுவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “முதல்வர், காவலர்களுக்கு இலவசப் பேருந்து திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் பயன்பெறும் காவலர்களின் தகவலை போக்குவரத்துத் துறைக்கு அளிக்க வேண்டும்.

குறிப்பாக சென்னையில் ஏசி பேருந்தைத் தவிர இலவசமாக மாதம் முழுவதும் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணம் செய்யலாம், மற்ற மாவட்டங்களில் விலையில்லாப் பயணச்சீட்டு மூலம் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் திட்டத்தின் கீழ் காவலர்கள் சேர்க்கப்பட்டுப் பயன் பெறலாம்” என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இந்தத் திட்டத்திற்காக அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளது என்பதால், காவலர்கள் பயணச் செலவை தமிழகம் முழுவதும் கணக்கிட ஏதுவாக இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான காவல்துறையினரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை துணைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை’

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்
படக்குறிப்பு, போக்குவரத்துத் துறையின் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போக்குவரத்துத் துறையின் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, காவல்துறைக்கான இலவசப் பேருந்து பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம், இதுகுறித்த காவல்துறையினரின் தகவல்களையும் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

"தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பேருந்துகளில் காவல்துறையினரை பயணச் சீட்டு இன்றி ஏற்றிச் செல்லலாம் என்ற அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை, அதிகாரபூர்வமாக வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவோம். அதுவரை காவலர்கள் அரசுப் பேருந்துகளில் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது,” எனக் கூறினார்.

தமிழக அரசு கூறுவது என்ன?

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்
படக்குறிப்பு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

காவல்துறைக்கான இலவச பேருந்துப் பயணம் தொடர்பான அரசாணை எப்போது வெளியாகும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டோம், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், போக்குவரத்துத் துறையின் அறிவிப்பின்படிதான் காவலர்கள் பயணம் செய்ய முடியும்," என்று கூறினார்.

"உள்மாவட்டத்தில் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்த பிறகு போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தெளிவுபடுத்துகிறேன்,” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)