ஜி7 மாநாடு: உறுப்பினராகவே இல்லாத இந்தியாவை தொடர்ந்து அழைப்பது ஏன்?

ஜி7 மாநாட்டில் மோதி

பட மூலாதாரம், Getty Images

ஜி-7 உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் புகலியாவில் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உலகம் நெருக்கடியான சூழலில் இருக்கும் இந்நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. காஸாவிலும் யுக்ரேனிலும் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல ஜி-7 நாடுகள் உள்நாட்டு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சிஸ் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி, இத்தாலி சென்றுள்ளார். பிரதமராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கவிருந்த ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

2023-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்ற போது இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோதி அந்த மாநாட்டில் பங்கேற்றார். 2019-ஆம் ஆண்டிலும் இந்தியா ஜி-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டும் இந்தியா உட்பட ஜி-7 நாடுகளில் அங்கம் வகிக்காத பல நாடுகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

ஜி7 மாநாடு, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜி-7க்கு இந்தியா ஏன் முக்கியம்?

இந்தியாவுடன் உறவாடுவது ஜி-7 நாடுகளுக்கு முக்கியமாகும். இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 2.66 ட்ரியல்லன் டாலர். இந்தியப் பொருளாதாரம் பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா ஆகிய மூன்று ஜி-7 நாடுகளின் பொருளாதாரத்தை விடப் பெரியது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்று சர்வதேச நிதியம் கூறுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியை விட வித்தியாசமானது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் வளர்ச்சி சீரானதாக இருக்கும், ஆனால் இந்தியாவில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

சர்வதேச நிதியத்தின் ஆசிய பசிபிக் துணை இயக்குநர் ஆன் மேரி குல்ட் – வுல்ஃப், உலகுக்கு பொருளாதார உந்து சக்தியாக இந்தியா இருக்கும் என்று கடந்த ஆண்டு தெரிவித்தார். முதலீடு, தொழில், மற்றும் நுகர்தல் மூலம் உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லக் கூடியது என்றார்.

உலகில் உள்ள பல நாடுகளில், முதலீட்டாளர்கள் இந்தியாவையே விரும்புகின்றனர். ஏனென்றால், சந்தை திறன், குறைந்த செலவுகள், தொழில்துறைக்கு ஏதுவான சூழல் இந்தியாவில் உள்ளன.

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்தியா. நாட்டின் 68% மக்கள்தொகை வேலை பார்க்கும் வயதினராக (15 வயது முதல் 64 வயது வரை) உள்ளனர். மேலும் 65% மக்கள் 35 வயதுக்கும் கீழானவர்களாக உள்ளனர். இந்தியாவில் இளம், திறன்மிக்க, ஓரளவு திறன்மிக்க மக்கள் அதிகம் பேர் உள்ளனர்.

இரண்டாவது காரணம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்திய பசிபிக் மண்டலத்தில் தங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தும் கொள்கைகளை வகுத்து வருகின்றனர்.

ஜி-7 ல் இந்தியா இடம் பெறுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவை வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதாரமாக ஐரோப்பிய நாடுள் பார்க்கின்றன.

ஜி7 செல்வாக்கு வரும் ஆண்டுகளில் குறையுமா?

கடந்த சில ஆண்டுகளில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஜி-7 ஐரோப்பிய உறுப்பினர்கள், தங்களுக்கான சொந்த இந்திய பசிபிக் உத்திகளை வகுத்துள்ளன. இத்தாலியும் இந்திய பசிபிக் மண்டலத்துடன் நெருக்கமாக இருப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வாஷிங்டனை சேர்ந்த ஒரு ஆய்வுக் குழுவான ஹட்சன் நிறுவனத்தின் ஒரு அறிக்கையின் படி, ஜி7-இன் நிரந்தர அழைப்பாளராக இந்தியா சமீப காலமாக உள்ளது.

ஜி-7 செல்வாக்கு மிகுந்த குழுவாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் செல்வாக்கு குறைந்து வரும் நேரத்தில், ஜி-7 மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

சீன-ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உறவுகள் மோசமாகி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், எந்த வித தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கும் வலிமை கொண்டதாக இல்லை.

ரஷ்ய-யுக்ரேன் போர் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை விடக் கடுமையான நிலைப்பாட்டை ஜி-7 ரஷ்யாவுக்கு எதிராக எடுத்தது.

எனினும் ஜி7-இன் செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு காரணம், 1980-களில் ஜி-7 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 60% ஆக இருந்தது. இப்போது அது 40% ஆக குறைந்துள்ளது.

ஹட்சன் நிறுவன அறிக்கை, ஜி7-இன் செல்வாக்கு வரும் ஆண்டுகளில் குறையும் என்று கணிக்கிறது. அப்படியான சூழலில், ஜி-7 நாடுகளின் புதிய உறுப்பினராக இந்தியா இருக்கலாம். இந்தியா ஜி-7 உறுப்பினராகலாம் என்று உலகின் பல்வேறு அரசியல் நிபுணர்களும் கணித்து வருகின்றனர். பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டில் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பிரிட்டனுக்கு சமமாக உள்ளது. மேலும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால், இந்தியாவுடன் உரையாட ஜி-7 நாடுகள் அழைப்பு விடுக்கின்றன.

நடப்பு ஜி7-இல் என்ன விவாதிக்கப்படும்?

ஜி-7 ல் இந்தியா இடம் பெறுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ளும் உத்திகள் குறித்து ஜி-7 மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாடு பல்வேறு காரணங்களுக்காக முக்கியமானது.

விலைவாசி உயர்வு மற்றும் வர்த்தக ரீதியான சிக்கல்களுக்கு இடையில், உலக பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள பொருளாதார கொள்கைகளை ஒருங்கிணைப்பது இந்த ஜி-7 உச்சி மாநாட்டின் முதல் நோக்கமாகும்.

இரண்டாவதாக, கரியமிலவாயு வெளியிடப்படும் அளவை குறைப்பதற்கான வழிகள் வகுக்கப்பட்டு, நிலையான ஆற்றலை (sustainable energy) ஊக்குவித்து, காலநிலை மாற்றத்தை கையாள்வத்தை கவனத்தில் கொள்ளும்.

மூன்றாவது, உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதாகும், ஏனென்றால் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, அது போன்ற ஒரு அவசர நிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டது.

இதை தவிர, உலக அரசியலில் நிலவும் பதட்டமான சூழல்களான காஸா மற்றும் உக்ரைன் போர் குறித்தும் சீனா, ரஷ்யா குறித்தும் ஆலோசிக்கப்படும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

ஜி-7 என்றால் என்ன?

ஜி-7 என்பது ‘ஏழு பேர் கொண்ட குழு’ என்று அர்த்தம். உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகள் மீது தாக்கம் செலுத்தும் உலகின் மிகவும் முன்னேறிய ஏழு நாடுகளின் கூட்டமைப்பு தான் ஜி-7.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவையே அந்த ஏழு நாடுகள்.

1998-இல் ரஷ்யாவும் இந்த குழுவில் சேர்க்கப்பட்டிருந்தது. அப்போது இந்த குழு ஜி8 நாடுகள் என்று அழைக்கப்பட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு க்ரிமியாவின் ஆக்கிரமிப்புக்கு பிறகு, ரஷ்யா வெளியேற்றப்பட்டது.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகவும், உலகின் மக்கள் தொகை அதிகம் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகவும் இருந்த போதிலும், சீனா எப்போதும் இந்த குழுவின் உறுப்பினராக இருந்ததில்லை.

சீனாவில் தனிநபர் வருமானம் ஜி-7 நாடுகளை விட குறைவாக இருப்பதால், சீனா முன்னேறிய நாடாக கருதப்படுவதில்லை.

எனினும், சீனாவும் பிற நாடுகளும் ஜி-20 குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் ஜி7-இல் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அதன் அதிகாரிகள் ஜி-7 மாநாடுகளில் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

ஆண்டு முழுவதுமே ஜி-7 நாடுகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் சந்தித்துக் கொண்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, சர்வதேச நிகழ்வுகள் குறித்து கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்.

ஜி-7 ல் இந்தியா இடம் பெறுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி-7 என்பது உலகின் மிகவும் முன்னேறிய ஏழு நாடுகளின் குழுவாகும்.

வளரும் நாடுகளுடன் ஜி-7 எப்படி இயங்குகிறது?

ஜி-7 மாநாட்டின் முக்கிய நோக்கமாக, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடனான உறவுகள் இருக்கும் என்று இத்தாலி கூறுகிறது. நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையிலான உறவுகளாக அவை இருக்கும் என்றும் கூறியது.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் இந்திய பசிபிக் மண்டலத்திலிருந்து 12 நாடுகளை இத்தாலி ஜி-7 மாநாட்டுக்கு அழைத்துள்ளது.

ஜியார்ஜியா மெலோனி அரசின் ‘மட்டேய் திட்டத்தின்’ கீழ் இத்தாலி பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியுவி மற்றும் கடன் வழங்கப் போகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதே இத்தாலியின் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே, எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் குழாய்களை கட்டி எரிசக்தித் துறையில் முக்கிய நாடாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இத்தாலிக்கு இத்திட்டம் உதவும்.

எனினும் பல நிபுணர்கள், இத்திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு இடம் பெயர்தலை நிறுத்தப் போகிறது இத்தாலி என்று கூறுகின்றனர்.

பிற நாடுகளையும் இத்திட்டத்துக்கு நிதி பங்களிப்பு வழக்க இத்தாலி கோரியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)