காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன?

இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம், Getty Images / Anadolu

படக்குறிப்பு, இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களை படிக்கும் காஸா மக்கள்
  • எழுதியவர், ஸ்டெஃபனி ஹெகார்டி & அகமது நூர்
  • பதவி, பிபிசி உலக சேவை

தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த வெளியேற்ற எச்சரிக்கைகளில் குறிப்பிடத்தக்க பிழைகள் இருப்பதை பிபிசி பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தன. குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்த அந்த எச்சரிக்கைகளில் சில மாவட்டங்களின் பெயர்களும் அதில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

இத்தகைய தவறுகளால், சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவதாகக் கருதப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கைகள் குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருப்பதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நிராகரித்துள்ளன.

பிபிசியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட எச்சரிக்கைகள் என்பது பொதுமக்களை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு கூறு மட்டுமே எனத் தனது அறிக்கையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

சூழ்நிலைகள் மோசமாக இருந்தால் ஒழிய, பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தாக்குதல்களைப் பற்றிய முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக வெளியிட வேண்டுமென சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கூறுகிறது.

ஹமாஸுக்கு எதிரான தனது போரைத் தொடர்வதால், பொதுமக்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் தனது எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்த அமைப்பு காஸாவின் வரைபடத்தை நூற்றுக்கணக்கான எண்ணிடப்பட்ட தொகுதிகளாகப் பிரிக்கிறது. ஆனால் இந்த எண்ணற்ற தொகுதி அமைப்பானது காஸா மக்களுக்குப் பழக்கப்பட்டதல்ல.

மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்படும்போது, தாங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருக்கிறோமா இல்லையா என்பதை காஸா மக்கள் கண்டறிய, அந்தப் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் ஆன்லைன் வரைபடத்தை (மாஸ்டர் பிளாக்) இஸ்ரேல் தயாரித்துள்ளது.

ஜனவரியின் பிற்பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சார்பாக எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிடப்பட்ட ஒரு பதிவில், க்யூஆர் குறியீடு வழியாக மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகுவதற்கான இணைப்பு வழங்கப்பட்டது.

இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு, காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது.

ஆனால் எங்களிடம் பேசிய காஸா மக்கள் சிலர், இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும், எச்சரிக்கைகளில் உள்ள பிழைகளைப் புரிந்துகொள்வதற்கும், வரைபடத்தைப் பார்த்து புதிய வழிகளைக் கண்டறியவும் கடினமாக இருப்பதை விவரித்துள்ளனர்.

ஃபேஸ்புக், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் டெலிகிராமில் உள்ள ஐடிஎஃப்-இன் அரபி மொழி சமூக ஊடக சேனல்களை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அங்கு எச்சரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான பதிவுகளை நாங்கள் கண்டோம்.

ஒரே எச்சரிக்கை மீண்டும் மீண்டும், சில நேரங்களில் சிறிய மாற்றங்களுடன், தொடர்ச்சியான நாட்களில் அல்லது வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட்டு, பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆன்லைனில் பகிரப்பட்ட எச்சரிக்கைகளையும் நாங்கள் தேடினோம். காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக ஐடிஎஃப் கூறுகிறது.

டிசம்பர் 1 முதல் வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளில் பிபிசி கவனம் செலுத்தியது. ஏனெனில் சர்வதேச அழுத்தத்தின் கீழ் வந்த பிறகு, முன்பைவிட மிகவும் துல்லியமான வழிமுறைகளை வழங்கும் ஒரு வழியாக தனது பிளாக் அமைப்பை டிசம்பர் 1 முதல் ஐடிஎஃப் தொடங்கியது.

இந்தத் தேதிக்குப் பிறகு நாங்கள் கண்டறிந்த ஐடிஎஃப் அமைப்பின் பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் 26 தனித்தனி எச்சரிக்கைகளாகப் பிரித்தோம். பெரும்பான்மையானவர்கள் மாஸ்டர் பிளாக் அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டனர்.

இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன, ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன.

ஆன்லைன் எச்சரிக்கைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள், முன்பே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி செய்திகள் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாக ஐடிஎஃப் அமைப்பு பிபிசியிடம் தெரிவித்தது.

காஸாவில் சாலை மார்க்கமாகச் சென்று விரிவான அறிக்கைகளைப் பெறுவது சாத்தியமில்லை. தொலைபேசி நெட்வொர்க் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் பற்றிய ஆதாரங்களை பிபிசியால் சேகரிக்க முடியவில்லை.

பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன. அவற்றை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற காஸா மக்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன. அவை,

  • சமூக ஊடகப் பதிவில் இருந்த 12 எச்சரிக்கைகள், அதில் தொகுதிகள் அல்லது சுற்றுப்புறங்கள் குறித்து பட்டியலிடப்பட்டிருந்தது, ஆனால் அதனுடன் உள்ள வரைபடத்தில் அந்தப் பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.
  • ஒன்பது பகுதிகள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அதனுடன் இருந்த சமூக ஊடகப் பதிவில் பட்டியலிடப்படவில்லை.
  • பத்து எச்சரிக்கைகள், தொகுதிகள் இரண்டாகப் பிரித்து காட்டப்பட்டிருந்தன. ஆனால் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் எல்லையை நிர்ணயிக்கும் அளவுக்கு அந்த வரைபடம் விரிவாக இல்லை.
  • ஏழு எச்சரிக்கைகளின் வரைபடத்தில் ‘பாதுகாப்பு’ பகுதிகளை சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, மக்கள் வெளியேற வேண்டிய பகுதிகளையும் சேர்த்தே சுட்டிக் காட்டுகின்றன.
இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிழைகள் குறித்து நாங்கள் ஐடிஎஃப் அமைப்பிடம் கேட்டபோது, ​​அது வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை.

மேலும், ஒரு எச்சரிக்கையில் ஒரு மாவட்டத்தில் இருக்கும் பகுதிகள் மற்றொரு மாவட்டத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்றொன்று இரண்டு பகுதிகளின் தொகுதி எண்களை இணைத்துக் கொடுத்துள்ளது. மூன்றாவதாக, பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள சில தொகுதிகள் காஸாவின் எதிர்பக்கத்தில் உள்ளது போல வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பிழைகள் பற்றி நாங்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையிடம் கேட்டபோது, ​​அவர்கள் வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை. ஆனால் சமூக ஊடக பதிவுகளின் செய்தி போதுமான அளவு தெளிவாக உள்ளது எனக் கூறினர்.

மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல வரைபடத்தில் அம்புகள் பயன்படுத்தப்படும்போது, ​​​​’அம்புகள் பொதுவான திசையைச் சுட்டிக்காட்டுகின்றன என்பது வெளிப்படையான ஒரு விஷயம்தான்’ எனவும் பதிவுகளின் செய்தியில் முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியது.

இந்தத் தவறுகள் மற்றும் பிழைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் ‘பயனுள்ள மேம்பட்ட எச்சரிக்கைகளை’ வழங்குவதற்கான இஸ்ரேலின் கடமையை மீறக்கூடும் என்று ஆக்ஸ்ஃபோர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் எதிக்ஸ், சட்டம் மற்றும் ஆயுத மோதல் பிரிவின் இணை இயக்குநர் ஜானினா டில் கூறுகிறார்.

“பெரும்பாலான எச்சரிக்கைகளில் பிழைகள் இருந்தாலோ அல்லது பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்குத் தெளிவில்லாமல் இருந்தாலோ, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டிருக்கும் செயல்பாட்டை இந்த எச்சரிக்கைகள் உறுதி செய்யவில்லை என அர்த்தம்” என்று கூறுகிறார் அவர்.

“இந்த எச்சரிக்கைகளின் நோக்கம் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாகும். அதன் பிழைகள் அவர்களின் செயல்பாட்டை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது,” என எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான குபோ மக்காக் கூறுகிறார்.

'பெரிய விவாதம்'

இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் காஸா தொழிலதிபர் சலே பார்த்துள்ளார்.

காஸா நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சலே, டிசம்பரில் மத்திய காஸாவில் உள்ள நுசிராட்டில் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்த போது அங்கு மின்சாரம், தொலைபேசி சிக்னல்கள் இல்லை என்றும், நீண்ட நேரம் இணையத் தடை இருந்தது என்றும் கூறுகிறார்.

ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் அவர் பார்த்துள்ளார். தனக்கு ஐடிஎஃப் அமைப்பின் வெளியேற்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

இறுதியில், எகிப்து மற்றும் இஸ்ரேலில் உள்ள தரவு நெட்வொர்க்குகளை அணுகக்கூடிய சிம் கார்டு பயன்படுத்தும் ஒருவரைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியேறுவதற்கான எச்சரிக்கை குறித்த பதிவைக் கண்டார்.

"பல குடியிருப்புத் தொகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் எந்தத் தொகுதியில் வசித்தோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுவொரு பெரிய குழப்பத்திற்கு வழிவகுத்தது," என்று சலே கூறுகிறார்.

சலேவால் எப்போதாவதுதான் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. போருக்கு சற்று முன்பு பிரிட்டனில் வசிக்கும் அவரது மனைவி அமானிக்கு ஒரு செய்தி அனுப்பினார். அவரது மனைவியால், ஆன்லைனில் இருந்த ஐடிஎஃப் அமைப்பின் மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகி, கணவர் சலே எங்கிருக்கிறார் என்பதைக் குறிப்பிட முடிந்தது.

ஆனால், முகநூலில் இருந்த வெளியேற்ற எச்சரிக்கையைத் திரும்பிப் பார்க்கையில், சலே தங்கியிருந்த தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்ததை தம்பதியினர் உணர்ந்தனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இறுதியில், சலே குழந்தைகளுடன் வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவரது குடும்பத்தில் சிலர் போர் அடுத்த கட்டத்தை எட்டும் வரை அங்கேயே இருந்தனர். சலே புரிந்துகொள்ள முயன்ற அந்த வெளியேற்ற எச்சரிக்கை குறித்த முகநூல் பதிவை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அதில் பல குழப்பமான அம்சங்கள் இருப்பதைக் கண்டோம்.

பதிவின் செய்தியில், 2220, 2221, 2222, 2223, 2224 மற்றும் 2225 ஆகிய தொகுதிகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஐடிஎஃப் அமைப்பின், இந்தத் தொகுதிகள் அனைத்தும் ஐடிஎஃப்-இன் ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்தில் இருப்பவை.

ஆனால் அந்தப் பதிவில் உள்ள வரைபடத்தில், ஆறு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தொகுதி 2220 எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு, பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜனவரியில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிரான வாதத்தின் ஒரு பகுதியாக, தனது தடுப்பு எச்சரிக்கை அமைப்பை சர்வதேச நீதிமன்றத்தின் முன்வைத்தது இஸ்ரேல் அரசு.

“இஸ்ரேல் அரசு குடிமக்களைப் பாதுகாக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், முழுப் பகுதிகளையும் காலி செய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிகமாக வெளியேற்றப்படும் வகையில் விரிவான வரைபடத்தை அரசு உருவாக்கியுள்ளதாகவும்” வாதிட்டனர் இஸ்ரேலின் வழக்கறிஞர்கள்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைத்த ஒரு சமூக ஊடக எச்சரிக்கை பதிவில், இரண்டு பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது. பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு, பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது.

ஐடிஎஃப் அதன் அரபு ட்விட்டர் கணக்கு மூலம், வெளியேற்றப்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ள தங்குமிடங்களின் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்கி வருவதாகவும் இஸ்ரேலிய வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆனால் பிபிசி பகுப்பாய்வு செய்த அனைத்து பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் தங்குமிடங்களின் பெயர்கள் அல்லது அவற்றின் சரியான இருப்பிடங்களை வழங்கும் எந்த எச்சரிக்கையையும் நாங்கள் காணவில்லை.

பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது. 26 எச்சரிக்கைகளில் ஒன்பது தொகுதிகளின் எண்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் பெயர்கள் கலவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மற்ற ஒன்பது எச்சரிக்கைகளில் தொகுதி எண்கள் இல்லை. ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பதிலாக அவை சுற்றுப்புறப் பகுதிகளைத்தான் பட்டியலிட்டன. அதில் பெரும்பாலும் தொகுதிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன, எண்கள் இல்லை.

இந்த சுற்றுப்புறப் பகுதிகளின் சரியான தொகுதிகளைத் தீர்மானிக்க பிபிசியால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 32 பேரை உள்ளடக்கிய அப்து குடும்பம், போரின் தொடங்கிய நேரத்தில் காஸா நகரத்திலிருந்து மத்திய காஸாவிற்கு தப்பிச் சென்றது. பின்னர், டிசம்பரில், ஒரு விமானத்தில் இருந்து கைவிடப்பட்ட எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் அவர்களுக்குக் கிடைத்தது.

பிபிசிக்கு கிடைத்த குடும்ப வாட்ஸ்அப் குழுவில் உள்ள செய்திகள் மூலம், அந்த துண்டுப் பிரசுரத்திற்கு அர்த்தம் என்னவென்று இரண்டு நாட்களாக அவர்கள் வாதிட்டதால் அவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்துகொள்ள முடிந்தது.

அதில் வெளியேற வேண்டிய அக்கம்பக்கத்தினரின் பட்டியல் இருந்தது, ஆனால் குடும்பத்தாரால் அந்த இடங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிலிருந்த எச்சரிக்கை செய்தி, "அல்-புரிஜ் முகாம் மற்றும் பத்ர், வடக்கு கடற்கரை, அல்-நுஷா, அல்-சஹ்ரா, அல்-புராக், அல்-ரவ்தா மற்றும் அல்-சஃபா ஆகியவற்றின் சுற்றுப்புறங்களில் இருந்து வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது."

அவர்கள் அல்-சஹ்ரா மற்றும் பத்ரை ஆகிய பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அவை வாடி காஸா ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளன. "வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில்" அல்-ரவ்தா அல்லது அல்-நுஷாவின் பகுதிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அவர்கள் இங்கேயே தங்கி கடுமையான தரைப் போரில் சிக்கிக் கொள்ள வேண்டுமா, அல்லது இங்கிருந்து வெளியேறி, அவர்களுக்குக் கிடைத்த ஒரே தங்குமிடத்தை விட வேண்டுமா?" என்று அப்து குடும்பத்தினர் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர்.

இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு, இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களில் தவறாக குறிக்கப்பட்டிருந்த இடங்கள்

சிலர் "டேர் அல்-பாலாவில் உள்ள தங்குமிடங்களுக்கு" செல்லுங்கள் என்று கூறிய எச்சரிக்கை தகவலைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் அந்த இடத்தைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்து திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அப்படி நாங்கள் இறந்தால், ஒன்றாகவே இறப்போம் என்று அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

ஓரிகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஜமோன் வான் டென் ஹோக் மற்றும் சிட்டி யுனிவர்சிட்டி நியூயார்க் கிராஜுவேட் சென்டரின் கோரே ஷெர் ஆகியோரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட காஸாவின் அழிவு குறித்த செயற்கைக்கோள் தரவு, அவர்கள் விட்டுச் சென்ற பகுதியைவிட அதிக அழிவைக் காட்டியது.

செயற்கைக்கோள் தரவுகள், அந்தக் குடும்பம் தப்பியோடிய டெய்ர் அல்-பாலா பகுதி இந்தக் காலகட்டத்தில் மிகவும் தீவிரமான தாக்குதலுக்கு உட்பட்டிருந்ததைக் காட்டுகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை "இந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு அங்கு நிலவிய பொதுமக்கள் நடமாட்டம் குறித்த தரவுகளை" குறுக்கு சோதனை செய்ததாகவும், அவை குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இல்லை என்றும் கூறியது.

இந்த எச்சரிக்கைகள் மூலம் "காஸா பகுதியில் எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும்" அது கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)