www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கொனார்க் சூரியக் கோயில்

ஆள்கூறுகள்: 19°53′15″N 86°05′41″E / 19.887444°N 86.094596°E / 19.887444; 86.094596
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சூரியக் கோவில், கொனார்க்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, iii, vi
உசாத்துணை246
UNESCO regionஉலகப் பாரம்பரியக் களம்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8th தொடர்)

சூரியக் கோவில், கொனார்க் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில்.[1] கோனார்க் சூரியனார் கோவிலாகும். மாமன்னர் ஒட்ட ராஜு லங்குலா கஜபதி நரசிங்க தேவாவின் (பொ.ஊ. 1238–64) காலத்தில் கட்டப்பட்டது. முதலாம் நரசிங்க தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

சூரியத் தேரின் சக்கரம்

"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரிய பகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (பொ.ஊ. 1236–1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.

இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன.

பாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரிய பகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக் காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலை நாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.

நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.

இந்தியாவில் சூரிய பகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

கோவிலின் அமைப்பு[தொகு]

கொனார்க் சூரியக் கோயிலின் அகலப் பரப்புக் காட்சி

இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்[தொகு]

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம். சூரிய பகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக் கோவில் முன் நடனத் திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.

போக்குவரத்து[தொகு]

புவனேசுவரில் இருந்து 65 கிமீ தொலைவிலும் புரியில் இருந்து 35 கிமீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலை மார்க்கமாக சென்று விடலாம். புரி, புவனேசுவரில் தொடருந்து நிலையங்கள் உள்ளன. புவனேசுவரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத் தலமாகும்.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sun Temple, Konârak
என்பதில் ஊடகங்கள் உள்ளன.






  1. "Konark Sun Temple". Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனார்க்_சூரியக்_கோயில்&oldid=3732435" இலிருந்து மீள்விக்கப்பட்டது